2014-12-04 16:50:18

நற்செய்தி அறிவிப்புக்கு முன்னர் நம் விசுவாசம் ஆழப்படுத்தப்படவேண்டும்


டிச.04,2014. கிறிஸ்தவம் என்னும் அணிகலன் மேலும் மெருகூட்டப்பட்டு ஒளிவீச வேண்டும் என்பதால், கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைப் புரிந்து, கற்று அதனை மேலும் ஆழமாக வாழவேண்டியத் தேவை உள்ளது என அழைப்பு விடுத்தார், மும்பைப் பேராயரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்தியாவில் நற்செய்தியை அறிவித்த புனித பிரான்சிஸ் சேவியரின் உடல், மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ள வேளையில், அப்புனிதரின் திருவிழாவான இப்புதன்கிழமையன்று கோவாவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், புதிய நற்செய்தி அறிவித்தலின் முக்கியத்துவம் குறித்தும், அதற்கான கிறிஸ்தவர்களின் தயாரிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
முதலில் நம் விசுவாசத்தைக் குறித்து தெளிவாகப் புரிந்துகொண்டு, அதை ஆழப்படுத்தவேண்டியது அவசியம் என்றார் கர்தினால் கிரேசியஸ்.
நம் விசுவாசத்தை ஆழப்படுத்துவதைத் தொடர்ந்து, அதனை வாழவேண்டும், அதன் பின்னர் அந்த விசுவாசத்தை அறிவிக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், குடும்பங்களின் முக்கியத்துவம், ஏழைகளிடையேயான நம் பணியின் அவசியம் ஆகியவை குறித்தும் எடுத்துரைத்தார்.
கலாச்சாரங்களிடையேயான கலந்துரையாடல்களின் முக்கியத்துவம், இடற்பாடுகளையும் தாண்டி, சுயநலமின்றி ஒருமைப்பாட்டுடன் அனைத்துப் பகுதிகளுக்கும் நற்செய்தி அறிவித்தலின் தேவை குறித்தும் தன் மறையுரையில் வலியுறுத்தினார் கர்தினால் கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.