2014-12-04 16:48:46

திருப்பீடத்திற்கும், பிரித்தானிய அரசுக்கும் இடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு நினைவு


டிச.04,2014. இரு உலகப் போர்கள் நிகழ்ந்தபோதும், அண்மையக் காலத்தில் உலகின் பல நாடுகளில் உருவான மோதல்களின்போதும், திருஅவையுடன் இணைந்து, பிரித்தானிய அரசு, ஒப்புரவு வழிகளையும், உரையாடல் வழிகளையும் தேடியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் பாராட்டினார்.
திருப்பீடத்திற்கும், பிரித்தானிய அரசுக்கும் இடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு நினைவைக் கொண்டாட, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், டிசம்பர் 3, இப்புதன் மாலை, உரோம் நகரில் அமைந்துள்ள புனித பவுல் பசிலிக்காவில் சிறப்புத் திருப்பலியாற்றினார்.
இத்திருப்பலியில் மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், கிறிஸ்தவ மதிப்பீடுகளின் அடிப்படையில், மனித மாண்பை நிலைநிறுத்த, திருப்பீடமும், பிரித்தானிய அரசும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.
திருப்பீடத்திற்கும், பிரித்தானிய அரசுக்கும் தூதரக உறவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட பின்னர், திருத்தந்தையர் 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர் பிரித்தானிய நாட்டில் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும், எலிசபெத் அரசி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தது குறித்தும், கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
திருப்பீடத்திற்கும், பிரித்தானிய அரசுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த தூதரக உறவுகள் இடையில் முறிவுற்று, மீண்டும் 1914ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி புதுப்பிக்கப்பட்டதை, பிரித்தானியத் தூதர், Nigel Baker அவர்கள் இத்திருப்பலியின் இறுதியில் நினைவு கூர்ந்து பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.