2014-12-04 16:44:04

தன்னார்வத் தொண்டர்கள் உலக நாளையொட்டி திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


டிச.04,2014. உலகில் பெரும் இடறல்களாக இருக்கும் பசி, போர் ஆகிய கொடுமைகளை நீக்க, கிறிஸ்தவர்கள் என்ற அடையாளத்துடன் செயலாற்றும் தன்னார்வத் தொண்டர்களை நான் பாராட்டுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 5, இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் தன்னார்வத் தொண்டர்கள் உலக நாளையொட்டி, வத்திக்கான் வந்திருந்த 2000த்துக்கும் அதிகமான கிறிஸ்தவத் தன்னார்வத் தொண்டர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பால் அரங்கத்தில் டிசம்பர் 4, இவ்வியாழனன்று, சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
நற்செய்தி மதிப்பீடுகளுடன், குறிப்பாக, நல்ல சமாரியர் என்ற எடுத்துக்காட்டுடன் பணியாற்றும் கிறிஸ்தவத் தன்னார்வத் தொண்டர்கள், சமுதாயத்தில், மிகக் கடினமானச் சூழல்களில் வாழும் மக்களுக்கு, கிறிஸ்துவின் மென்மையான பண்புகளைக் கொண்டு செல்கின்றனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
வறுமையின் விளைவுகளான பசி, துன்பம் ஆகிய கொடுமைகளைப் போக்கும் முயற்சிகளில் மட்டுமல்லாமல், வறுமையின் காரணங்களாக, சமுதாயக் கட்டமைப்பில் உள்ள சமநிலையற்றத் தன்மை, உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகிய குறைகளையும் நீக்கும் கடமை, கிறிஸ்தவத் தன்னார்வத் தொண்டர்களுக்கு உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் கிறிஸ்தவத் தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பு, தொடர்ந்து, மனம் தளரா நம்பிக்கையுடன் முன்னேற, தன் ஆசீரையும், செபங்களையும் அளிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.