2014-12-04 16:50:38

இஸ்லாம் மதத்தை சிலர் தங்கள் வன்முறை எண்ணங்களோடு தொடர்புபடுத்த முயல்வது கண்டிக்கப்படவேண்டும்


டிச.04,2014. வன்முறை நடவடிக்கைகள், இஸ்லாம் மதத்தைக் குறித்த தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று தன் கண்டனத்தை வெளியிட்டார் Al Azhar இஸ்லாமிய தலைமை மதக்குரு Ahmed al-Tayyeb.
இஸ்லாம் மதத்திற்கும் வன்முறைக்கும் இடையே தொடர்பு இருப்பதுபோல் காட்டப்படுவது குறித்து விவாதிக்கும் நோக்கில் எகிப்தின் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துலகக் கருத்தரங்கில் உரையாற்றிய தலைமைக்குரு Ahmed al-Tayyeb அவர்கள், புனித நூல் குரானை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துபவர்களாலேயே, மத அடிப்படையில் வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கண்டனத்தை வெளியிட்டார்.
குரான் படிப்பினைகளை தெளிவான முறையில் கற்பிப்பதற்கு, பயிற்சி வகுப்புகளைத் துவக்கி நடத்துவதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார் அவர்.
இதே கருத்தரங்கில் உரையாற்றிய காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை இரண்டாம் Tawadros அவர்கள், சகிப்புத்தன்மையைச் சொல்லித்தரும் இஸ்லாம் மதத்தை, சிலர் தங்கள் வன்முறை எண்ணங்களோடு தொடர்புபடுத்தும் முயற்சிகள் கண்டிக்கப்படவேண்டியவை என்றார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.