2014-12-03 16:16:50

மதங்களிடையே நட்புறவை வளர்ப்பதற்கு திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம்


டிச.03,2014. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பதற்கு திருவருகைக் காலம் தகுந்ததொரு தருணம் என்று பிலிப்பின்ஸ் நாட்டின் பல்சமய உரையாடல் அமைப்பான Silsilah அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும், இஸ்லாமியர் கொண்டாடும் இரமதான் மாதத்திலும், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவருகைக் காலத்திலும், இந்த நட்புறவை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano கூறியுள்ளது.
கிறிஸ்துவின் வருகைக்கும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்கும் தயாரித்து வரும், பிலிப்பின்ஸ் நாடு, அமைதியின் இளவரசரான கிறிஸ்துவைப் போலவே, உலக அமைதிக்குப் பாடுபடும் உயர்ந்ததோர் உலகத் தலைவராக திருத்தந்தையை மதிக்கிறது என்று Silsilah அமைப்பினரின் அறிக்கை கூறுகிறது.
பிலிப்பின்ஸ் நாடெங்கும், குறிப்பாக, கிறிஸ்தவ இஸ்லாமிய மோதல்கள் நிகழ்ந்துள்ள Mindanao பகுதியில் அமைதி வளர்வதற்கு, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து சொல்லக்கூடிய ஒரு செபத்தை Silsilah அமைப்பினர் உருவாக்கியிருப்பதாகவும், அதனை, பள்ளிகளிலும், குடும்பங்களிலும், பல்சமய உரையாடல் நிறுவனங்களிலும் பயன்படுத்தவிருப்பதாகவும் இவ்வமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.