2014-12-03 16:11:20

திருத்தந்தை : துருக்கி திருத்தூதுப் பயணம் கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்தியது


டிச.03,2014. இப்புதன் காலை வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற பொதுமறையுரைக்குமுன்னர் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அரங்கில் இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க கலந்துரையாடல் அவையின் பிரதிநிதிகளையும், பின்னர் நோயாளிகளையும் தனித்தனியாக சந்தித்து சிறிது நேரம் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். நோயாளிகளுக்குத் தன் ஆசீரையும் அளித்தபின், தூய பேதுரு வளாகம் வந்து, தன் கடந்த வாரத் துருக்கி திருத்தூதுப் பயணம் குறித்த சிந்தனைகளை அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இந்த திருப்பயணம், நம் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையுடனும், இஸ்லாம் சகோதர சகோதரிகளுடனும் கத்தோலிக்க மதத்தின் பலன்தரும் உரையாடல் மற்றும் உறவுக்கு முக்கியப் பங்காற்றுவதாக இருக்கும் என செபிக்கிறேன். கிறிஸ்தவப் பாரம்பரியத்தைக் கொண்ட இந்த நாடு நமக்கு மிக நெருக்கமான ஒன்று. இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்நாட்டில், மத நம்பிக்கை என்பது ஒரு மிக முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது. தங்கள் மத நம்பிக்கையுடன் வாழ்வதற்கு அனைவருக்கும் இருக்கும் உரிமையையும் ஒருமைப்பாடு, அமைதி மற்றும் நீதியை ஊக்குவிப்பதில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டிய தேவையையும் அங்காராவிற்கான திருத்தூதுப் பயணத்தின்போது நான் வலியுறுத்தினேன். இஸ்தான்புல் நகரில் கத்தோலிக்கர்களோடும், துருக்கியின் பல்வேறு கிறிஸ்தவத் தலைவர்களோடும் நான் நிறைவேற்றிய திருப்பலியின்போது, ஒன்றிப்பிலும் விசுவாசத்திலும் வளர்வதற்கான நம் முயற்சிகளில் தூய ஆவி வழி நடத்தி உதவுமாறு அவர் அருளை வேண்டினேன். புனித அந்திரேயாவின் திருவிழாவான ஞாயிறன்று நடந்த வழிபாட்டுச் சடங்கில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுடன் இணைந்து, இவ்விரு சபைகளுக்கும் இடையே முழு ஒன்றிப்பை மீண்டும் பெறுவதற்கான அர்ப்பணத்தை மீண்டும் உறுதிசெய்து கையெழுத்திட்டேன். இந்த நோக்கங்களுக்காகச் செபிக்குமாறு உங்களை வேண்டுகிறேன். அதேவேளை, கிறிஸ்துவின் அமைதி, அன்பு மற்றும் உண்மையின் செய்தியை ஒருவர் ஒருவருக்கான மதிப்புடனும், உடன்பிறப்பு உணர்வு பேச்சுவார்த்தைகளுடனும் அறிவிப்பதற்கான திருஅவையின் பேரார்வத்திற்காகவும் செபிக்குமாறு உங்களைக் கேட்கிறேன்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இதே புதனன்று காலை, இங்கிலாந்து அமைச்சர் Anelayயும் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார். திருப்பீடத்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையே அரசியல் உறவு மீண்டும் உருவாக்கப்பட்டதன் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி இச்சந்திப்பு இடம்பெற்றதாக திருப்பீடம் அறிவிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.