2014-12-03 14:25:03

அமைதி ஆர்வலர்கள் : மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்(1964ல் நொபெல் அமைதி விருது)


டிச.02,2014. “இருள் இருளை விரட்ட முடியாது. ஒளியே இருளை விரட்ட முடியும். வெறுப்பு வெறுப்பை விரட்ட முடியாது, அன்பு மட்டுமே அதைச் செய்ய இயலும்” என்று சொன்னவர் 1964ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அட்லாண்டா நகரில் 1929ம் ஆண்டு சனவரி 15ம் தேதி பிறந்த மைக்கிள் கிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரின் தாத்தாவிலிருந்து எல்லாருமே பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபைப் போதகர்கள். ஜெர்மனியின் மாபெரும் கிறிஸ்தவ சீர்திருத்தவாதி மார்ட்டின் லூத்தர் பெயரை இவரின் தந்தை இவருக்கு வைக்க விரும்பியதால் இவரது பெயர் மார்ட்டின் லூத்தர் என மாற்றப்பட்டது. எனவே மைக்கிள் கிங், மார்ட்டின் லூத்தர் கிங் ஆனார். அட்லாண்டாவில் கறுப்பினத்தவருக்கென ஒதுக்கப்பட்ட மோர்கவுஸ் கல்லூரியில் 1948ல் பி.ஏ. பட்டம் பெற்ற இவர், பென்சில்வேனியாவில் குரோசெர் இறையியல் கல்லூரியில் படித்தபோது, வெள்ளை இனத்தவர் அதிகமாக இருந்த வகுப்பில் இவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1955ல் முனைவர் பட்டம் பெற்றார். பாஸ்டனில் கொரேட்டா ஸ்காட் என்ற பெண்ணைத் திருமணமும் செய்தார். இத்தம்பதியருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் பிறந்தனர்.
1954ல், அலபாமா மாநிலத்தின் Montgomery பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை ஆலயத்தில் தனது 25ம் வயதில் போதகராகப் பணியைத் தொடங்கினார் மார்ட்டின் லூத்தர் கிங். தனது கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக எப்போதும் உழைத்து வந்த கிங், அந்நாட்டில் முன்னணி தேசியக் கழகச் செயல்திட்ட குழுவில் உறுப்பினரானார். 1955ல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெற்ற முதல் பெரிய கறுப்பினத்தவரின் வன்முறையற்ற, Montgomery பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இப்போராட்டம் 382 நாள்கள் நீடித்தன. பேருந்துகளில் நிறப் பாகுபாடுகள் காட்டுவதற்கு அனுமதிக்கும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று 1956ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், கறுப்பினத்தவரும் வெள்ளை இனத்தவரும் பேருந்துகளில் சமமாகப் பயணம் செய்தனர். இந்தப் போராட்ட காலத்தில் கிங் கைது செய்யப்பட்டார், அவரது வீட்டுக்குக் குண்டு வைக்கப்பட்டது. பலர் இவரை தீய வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தினர். அதேநேரம், கிங், கறுப்பினத் தலைவரில் முதல்நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். 1955ல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் இவர் உதவினார்.
1957ம் ஆண்டில் தென் கிறிஸ்தவ தலைமைத்துவ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். குடியுரிமை இயக்கத்தின் புதிய தலைமைத்துவத்துக்கு உதவும் நோக்கத்தில் இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் கருத்தியல்கள், கிறிஸ்தவக் கோட்பாட்டிலிருந்தும், இதன் நடவடிக்கைகள் காந்திய முறையிலிருந்தும் கையாளப்பட்டன. காந்தியடிகளின் அறப்போராட்ட வழியால் ஈர்க்கப்பட்ட கிங், அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்துகொள்ள நீண்டகாலமாக நினைத்திருந்தார். 1959ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க சேவை நண்பர்கள் குழு என்ற குழுவினருடன் இந்தியா சென்றார். இந்த இந்தியப் பயணத்தில், வன்முறையற்ற எதிர்ப்பின் மூலம் அமெரிக்கக் குடியுரிமைகளின் நலனுக்கான தனது போராட்டத்தை அர்ப்பணிக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது. இந்தியாவில் இருந்தபோது தனது கடைசி மாலைப் பொழுதில் ஒரு வானொலி உரையின் போது இந்தியா வந்து நேரில் பார்த்த பிறகு முன்பைவிட இப்போது வன்முறையற்ற எதிர்ப்பு என்றால் என்னவென்று நான் நன்கு அறிந்துகொண்டேன். அறப்போராட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வலிமையான ஆயுதமாகும். நீதி மற்றும் கண்ணியமான போராட்டத்திற்கு பொருள்தரக் கூடியதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். காந்திஜியின் சில தார்மீக அடிப்படையிலான இக்கொள்கைகள் மார்ட்டின் லூதர் கிங்கின் சில கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம். கிறித்துவ எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், காந்திஜி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே இயேசுவின் வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தைக் கைக்கொண்டனர்.
1957ம் ஆண்டுக்கும், 1968ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 11 வருட காலத்தில், கிங், 60 இலட்சத்துக்கு மேற்பட்ட மைல்கள் பயணம் செய்து 2,500க்கும் அதிகமான தடவைகள் உரையாற்றினார். எங்கெல்லாம் அநீதிகள் காணப்பட்டு, போராட்டங்களும் அவை குறித்த செயல்பாடுகளும் இடம்பெற்றனவோ அங்கெல்லாம் இவர் பங்கெடுத்தார். அதேநேரம், ஐந்து நூல்களும், எண்ணற்ற கட்டுரைகளும் எழுதினார். இவ்வாண்டுகளில், பிர்மிங்காமில் பெரிய அளவில் போராட்டங்களை மேற்கொண்டார். இதுவே முழு உலகினரின் கவனத்தை ஈர்த்தது. “நீக்ரோ புரட்சியின் கொள்கை விளக்க அறிக்கை, பிர்மிங்காம் சிறையிலிருந்து கடிதம்” என்ற தலைப்பில் கிங் எழுதியதும் மனச்சாட்சிகள் ஒன்றிணையக் காரணமாயின. அலபாமாவில் கறுப்பின நீக்ரோக்கள், வாக்காளர்களாகப் பதிவுசெய்யும் திட்டத்தை முன்னெடுத்தார் கிங். இதற்காக, 1963ல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணியை வாஷிங்டனில் அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்தினார். இதில் கலந்துகொண்ட 2,50,000 பேருக்கு, இவர் ஆற்றிய 'எனக்கொரு கனவு' என்ற புகழ்மிக்க சொற்பொழிவு, அமெரிக்க வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்குத் தகவல்களை அனுப்பத் தொடங்கியது. தற்கொலை செய்து கொள்ளுமாறு கிங்குக்கு ஒரு மிரட்டல் கடிதமும் வந்தது. அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் ஜான்சனுக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இருபது தடவைகளுக்குமேல் கைது செய்யப்பட்டார். குறைந்தது நான்கு தடவைகள் தாக்கப்பட்டார். ஐந்து கவுரவப் பட்டங்களைப் பெற்றார். 1963ம் ஆண்டில் டைம் பத்திரிகை ஆண்டின் மனிதர் எனப் பெயரிட்டது. அமெரிக்க கறுப்பினத்தவரின் அடையாளப்பூர்வமான தலைவராக மட்டுமல்லாமல், உலகின் முக்கிய நபராகவும் நோக்கப்படுகிறார் கிங். இவரின் போராட்டத்தின் பலனாக, அமெரிக்க அரசு 1965ம் ஆண்டு கறுப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது. அதனைத் தொடர்ந்து கறுப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதை அறிவிக்கும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது.
வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராகப் பாடுபட்டதற்காக, தனது 35வது வயதில், 1964ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்றார் மார்ட்டின் லூத்தர் கிங். அச்சமயத்தில் இவ்வளவு இளவயதில் இவ்விருதைப் பெற்ற முதல் நபர் இவராக இருந்தார். இவ்விருதில் கிடைத்த 54,123 டாலரையும் குடியுரிமை இயக்கம் மேலும் முன்னேறுவதற்காக வழங்கினார். டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் குப்பைகளைச் சுத்தம்செய்யும் தொழிலாளிகள் கொல்லப்பட்டதையடுத்து, இடம்பெறவிருந்த ஊர்வலத்தைத் தலைமைதாங்கி நடத்துவதற்காக, 1968ம் ஆண்டு, ஏப்ரல் 4ம் தேதி மாலையில் அந்நகரின் விடுதியில் தனது அறையின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு வெள்ளையினத் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார் மார்ட்டின் லூத்தர் கிங். அந்த இடத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. அப்போது கிங்குக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரை கறுப்பு காந்தி என்றும் அழைத்தது. மார்ட்டின் லூதர் கிங் நினைவாக அமெரிக்காவில் சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கள்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்பட்டு, அன்று விடுமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இருளிலே விண்மீன்களைக் காண முடியும் என்றுரைத்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், இருளிலே சுடர்விடும் விண்மீனாக, உரிமை மறுக்கப்பட்டோரின் ஆதரவுக் குரலாகத் திகழ்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.