2014-12-02 14:23:41

விவிலியத்
தேடல் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை பகுதி - 3


RealAudioMP3 தவறு செய்யும் ஒருவரை, எத்தனை முறை மன்னிப்பது என்று கேட்ட புனித பேதுருவிடம், வரைமுறை ஏதுமின்றி மன்னிக்கவேண்டும் என்று இயேசு பதிலளித்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் முழுமையைச் சுட்டிக்காட்டும் 7 என்ற எண்ணைப் பயன்படுத்தி, 'எழுபது தடவை ஏழு முறை' (மத்தேயு 18: 22) மன்னிக்கவேண்டும் என்று இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.
மன்னிப்பு என்பது, அரைகுறையாக, அளந்து பார்த்துத் தரவேண்டிய கடனாக இல்லாமல், முழுமையானதாக, அளவற்ற வகையில் அள்ளித்தரவேண்டிய கொடையாக இருக்கவேண்டும் என்பதே பேதுருவுக்கும், நமக்கும் இயேசு வழங்கும் பாடம். இந்தப் பாடத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்த, இயேசு கூறிய உவமையே, மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை. விண்ணரசின் பண்பை விளக்கும் உவமை என்ற அறிமுகத்தோடு இயேசு இந்த உவமையைக் கூறினார். இதோ, இயேசு வழங்கிய அந்த உவமை:

மத்தேயு நற்செய்தி 18: 23-34
இயேசு பேதுருவிடம் கூறியது: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து, அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, ‘நீ பட்ட கடனைத் திருப்பித் தாஎனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, ‘என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ‘பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?’ என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

மன்னிப்பு என்ற பாடத்தை வலியுறுத்த, இந்த உவமையின் இறுதியில் இயேசு கூறும் வரிகள் ஓர் எச்சரிக்கை போல் ஒலிக்கின்றன:
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். (மத்தேயு 18: 35)

'கடன்படுதல்' என்ற கருத்தை மையப்படுத்தி மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும் இரு உவமைகள் சொல்லப்பட்டுள்ளன. மத்தேயு நற்செய்தியில் நாம் தேடலை மேற்கொண்டுள்ள இந்த உவமையில் 'மன்னிப்பு' என்ற பாடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'கடன்படுத'லை மையப்படுத்தி லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள ஓர் உவமையோ, 'அன்பை' வலியுறுத்துகிறது. பரிசேயர் ஒருவரது வீட்டில் இயேசு உணவருந்த சென்றார். அப்போது, அந்நகரில் பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக, அங்கு இயேசுவைத் தேடி வந்தார். பரிசேயர் வீட்டில் நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் லூக்கா பின்வருமாறு விளக்குகிறார்:
லூக்கா நற்செய்தி 7: 37-39
அவர் (அப்பெண்) நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டுவந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றேஎன்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
அச்சூழலில் இயேசு கூறிய உவமை இதோ:
லூக்கா நற்செய்தி 7: 40-43
இயேசு அவரைப் பார்த்து, “சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்என்றார். அதற்கு அவர், “போதகரே, சொல்லும்என்றார். அப்பொழுது அவர், “கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?” என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியேஎன்றார்.
'கடன் அன்பை முறிக்கும்' என்று உலகம் சொல்லித் தரும் பாடத்திற்கு முற்றிலும் மாறாக, 'கடன் அன்பைக் வளர்க்கும்' என்ற பாணியில் இயேசு சொல்லித்தரும் பாடம், சிந்திக்கத் தக்கது.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள மன்னிக்க மறுத்த பணியாள் உவமை, மத்தேயு நற்செய்தியில் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. நாம் வாசித்த இந்த உவமையில் மூன்று பகுதிகளை நாம் காணலாம். அரசருக்கும், பணியாளருக்கும் இடையே நிகழும் அற்புதமான மன்னிப்பு நிகழ்ச்சி முதல் பகுதியாகவும், மன்னிப்பு பெற்ற பணியாளர், தன் உடன் பணியாளரை மன்னிக்க மறுத்தது இரண்டாவது பகுதியாகவும், மன்னிப்பு தர மறுத்த பணியாளரை அரசர் மீண்டும் தண்டித்தது மூன்றாவது பகுதியாகவும் அமைந்துள்ளன.

அரசரிடம் பணியாளர் பட்ட கடன் தொகையும், மன்னிப்பு பெற்ற பணியாளரிடம் உடன் பணியாளர் பட்ட கடன் தொகையும் பல விவிலிய ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பணியாளர் அரசரிடம் பட்டக் கடனை, ஒரு மலையாக உருவகித்தால், மன்னிக்கப்பட்டப் பணியாளரிடம் உடன் பணியாளர் பட்டக் கடன் ஒரு சிறு தூசி என்றுதான் சொல்லவேண்டும். இத்தகைய ஒரு வேறுபாட்டை இயேசு இந்த உவமையில் கூறியுள்ளார். அரசரிடம் பணியாளர் பட்ட கடன், 'பத்தாயிரம் தாலந்து' என்றும் உடன் பணியாளர் பட்டக் கடன் 'நூறு தெனாரியம்' என்றும் இயேசு குறிப்பிடுகிறார்.
'பத்தாயிரம்' என்ற எண்ணிக்கை, கிரேக்க மொழியில் 'myriad' என்ற சொல்லால் குறிக்கப்பட்டது. கிரேக்க மொழியில் அதுவே மிகப்பெரும் எண்ணிக்கையாகக் கருதப்பட்டது. அதாவது, 'அளவிடமுடியாத' என்ற கருத்தைச் சொல்வதற்கு, பத்தாயிரம் அல்லது, 'myriad' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அதேபோல், யூதர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த பணத்தில், மிக அதிகமான மதிப்பு பெற்றது, 'தாலந்து' என்ற பணம். எனவே, எண்களில் மிக அதிகம் என்று கருதப்பட்ட 'பத்தாயிரம்' என்ற சொல்லையும், பணத்தில் மிக அதிகமான மதிப்பு பெற்ற 'தாலந்து' என்ற சொல்லையும் இயேசு இவ்வுவமையில் இணைத்து, 'பத்தாயிரம் தாலந்து' அந்தப் பணியாளர் கடன்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மக்கள் மத்தியில் ஒரு நாள் கூலி, ஒரு 'தெனாரியம்' என்று வழங்கப்பட்டது. ஒரு 'தாலந்து' என்பது, 6000 'தெனாரியத்'திற்கு ஈடான பணம். எனவே, 'பத்தாயிரம் தாலந்து' என்ற எண்ணிக்கை, 60,000,000 நாட்கள், அதாவது, ஏறத்தாழ 1,60,000 ஆண்டுகளுக்கு உரிய கூலித் தொகை. இதற்கு மாறாக, உடன் ஊழியர் பட்டக் கடன் 100 நாள் கூலிக்கு இணையானது.
உவமையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ள பணியாளர், அரசரிடம் பட்ட கடன் தொகையை ஈடுசெய்ய அவர், 1,60,000 ஆண்டுகள், ஊதியம் ஏதுமின்றி, அரசரிடம் பணியாற்றவேண்டும் என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறார்.
இத்தகைய எண்ணிக்கைகளைச் சிந்திக்கும்போது, அதுவும் ஒருவர் மற்றொருவருக்கு செலுத்தவேண்டிய கடன் இவ்வளவு பெரிய தொகையா என்று எண்ணிப்பார்க்கும்போது, வறுமைப்பட்ட, கடன்பட்ட நாடுகளை மனம் எண்ணிப் பார்க்கிறது.

World Debt Clock அதாவது, உலகக் கடன் மணிகாட்டி என்ற ஒரு வலைதளத்தைத் திறந்தால், இன்றைய உலகில் பெருகிவரும் கடன்தொகை மட்டும் ஒவ்வொரு நொடியும் கூடிவருவதைக் காணலாம். ஒவ்வொரு நொடிக்கும் 1,60,000 டாலர்கள், அதாவது, 96 இலட்சம் ரூபாய் என்ற அளவு உலகின் கடன்தொகை கூடிவருவதாகக் அந்த வலைதளத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனைச் செலுத்தவேண்டிய கட்டாயம் பெரும்பாலும் மூன்றாம் உலகம் என்று சொல்லப்படும் நாடுகளையே நெருக்குகின்றது. உலகக் கடன் என்பது வெறும் எண்ணிக்கை விளையாட்டு அல்ல; இதன் பாதிப்புக்களில் ஒருசிலவற்றை அடுத்தவாரத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.