2014-12-02 15:48:06

டில்லி புனித செபஸ்தியார் ஆலயம் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்கத் தலைவர்கள் கண்டனம்


டிச.02,2014. இந்தியத் தலைநகர் புதுடில்லியின் புறநகர்ப் பகுதியில் இத்திங்களன்று கத்தோலிக்க ஆலயம் ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளதற்குத் தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள்.
புதுடில்லியின் கிழக்குப் பகுதியிலுள்ள Dilshad மாவட்டத்திலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம் இத்திங்கள் காலை தீய எண்ணம் கொண்டவர்களால் தீ வைத்து தாக்கப்பட்டதில், திருப்பலிப்பீடம், திருப்பூட்டறை, திருவிவிலியம், திருச்சிலுவை என ஆலயத்தின் உட்புறம் முழுவதும் தீயினால் கருகியுள்ளன.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், இந்த வன்முறை குறித்தும், மத்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெறும் அடக்குமுறைகள் குறித்தும் உடனடியாக விசாரணைகள் நடத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த வன்முறை குறித்து தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இத்தகைய செயல்கள் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடையாய் உள்ளன என்று குறை கூறியுள்ளார்.
2001ம் ஆண்டில் கட்டப்பட்ட புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். இதனை, டெல்லியின் முன்னாள் பேராயர் கொன்சஸ்சாவோ அவர்கள் திறந்து வைத்தார்.

ஆதாரம் : Agencies








All the contents on this site are copyrighted ©.