2014-12-02 15:48:55

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம்


டிச.02,2014. ஒரே துறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்கும் சமச்சீர் கூலி அறிவிப்பு அரசிதழில் விரைவில் வெளியிடப்படும் என இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மக்களவை கேள்வி நேரத்தின்போது கூறிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, “குறைந்தபட்ச கூலித் தொடர்பான அறிக்கையை தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு அரசுக்கு சமர்ப்பித்து விட்டது, அந்த அறிக்கையின்படி புதிய குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்படும். இந்த அறிவிப்பு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும்”என்று கூறினார்.
கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம், நாடு முழுவதும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கும்படி பரிந்துரை செய்திருந்தது.
தற்போது குறைந்தபட்ச கூலியாக 137 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948ன் கீழ், மத்திய மாநில அரசுகள், அட்டவணையிலிடப்பட்ட வேலைகளுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ணயிக்கவும், திருத்தியமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.