2014-12-01 15:49:08

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும் துருக்கி நாடும்


டிச.01,2014. பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பாலமாக அமைந்துள்ள இஸ்தான்புல் நகரத்தில், இதே பண்புகளுடன் வாழ்ந்த புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை துருக்கி நாடு மறப்பதே இல்லை. 1935ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டுவரை துருக்கியில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய ஆஞ்சலோ ரொன்காலி என்ற இயற்பெயரைக் கொண்ட புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், துருக்கியில், இரு உலகங்களுக்கு இடையே, கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பாலமாகப் பணியாற்றியவர். இதனால் இவர் புதிதாகத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், துருக்கி அரசுத்தலைவர் Celal Bayar அவர்கள், 1959ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்தார். 1961ம் ஆண்டு சனவரி 21ம் தேதி திருப்பீடத்துக்கும், துருக்கி நாட்டுக்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டது. புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், பேராயர் ரொன்காலியாக, துருக்கியில் ஆற்றிய தூதரகப் பணிகள் பற்றிக் கூறிய எழுத்தாளர் Marmara அவர்கள்,
“பேராயர் ரொன்காலி அவர்கள் துருக்கி நாட்டில் தனது ஆன்மீக மற்றும் மேய்ப்புப்பணியை மட்டுமே ஆற்ற முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். அதேநேரம், அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் தனது நன்மதிப்பையும் நன்றியையும் வெளிப்படுத்தி தனது இருப்பை எல்லாரும் உணருமாறுச் செய்தார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகத்தில், உயர்மட்ட அதிகாரிகளின் உண்மையான மரியாதையையும் நன்மதிப்பையும் பெற்றார். இந்தப் புகழை அவர் தனக்காகப் பெறவில்லை. இயேசுவினால் தூண்டப்பட்டு இவ்வாறு செய்தார். இதனால் துருக்கியர்கள், தங்களின் நண்பர் என்று அன்போடு அவரை அழைத்தனர். Bosporus பகுதியில் முக்கிய அரசியல், கலாச்சாரத் தலைவர்கள் ஒன்றிணைய இவர் உதவினார். இதனால் 2ம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்துத் தரப்பினரோடும் முக்கியமான உறவுகளை இவரால் வளர்க்க முடிந்தது. புலம்பெயர்ந்தவர்கள், ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டவர்கள் சார்பாக இடைவிடாது பணி செய்தார். தவறாமல் சிறைகளுக்குச் சென்று கைதிகளைப் பார்வையிட்டார். துருக்கி மொழியைக் கற்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதைக் கற்று செபங்களை உள்ளூர் மொழிகளில் மொழி பெயர்த்தார் புனித திருத்தந்தை 23ம் ஜான்”.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.