2014-12-01 15:45:41

திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம், ஓர் அலசல்


டிச.01,2014. அன்பு நெஞ்சங்களே, கடந்த மூன்று நாள்களாக துருக்கி நாட்டில் திருத்தந்தை பிரான்ஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிக் கேட்டோம். இன்றைய அலசலில் மீண்டும் ஒருமுறை உங்களைத் துருக்கி நாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் துருக்கியில் இடம்பெற்ற நிகழ்வுகளை நினைக்கும்போது முதலில் நினைவுக்கு வருவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களிடம் ஆசீர் கேட்டுத் தலைதாழ்த்தியது. முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும், திருத்தந்தையின் தலையில் சிலுவை வரைந்து உச்சிமுகந்து முத்தமிட்டது. இரு பெரிய கிறிஸ்தவத் திருஅவைகளின் தலைவர்களிடையே நிலவும் உடன்பிறப்பு உணர்வுக்கு, இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவைப்படுமா! இந்நிகழ்வு வரலாற்றில் அழியாத இடத்தையும் பெற்றுவிட்டது. மேலும், கடுமையாய் நோய்வாய்ப்பட்டுள்ள கான்ஸ்டான்டிநோபிள் அர்மேனிய கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை Mesrob Mutafian அவர்களை, இஸ்தான்புல் நகர் புனித மீட்பர் அர்மேனிய மருத்துவமனைக்குச் சென்று சந்தித்துவிட்டு விமானநிலையம் வந்து உரோமைக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. அத்தனை பணிகள் மத்தியிலும் நோயாளிகளைச் சந்திப்பது திருத்தந்தையின் பண்புகளில் ஒன்றாக உள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கின்றது. அடுத்து, இஸ்தான்புல் நீல மசூதியில் இஸ்லாம் பெரிய குரு செபித்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மெக்கா நகர் இருக்கும் கிழக்கு நோக்கித் திரும்பி அமைதியாக செபித்தது. இந்தத் துருக்கித் திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவ சபைகளிடையே ஆழமான நல்லுறவுகளையும், சமயங்களுக்கிடையே உரையாடலையும் ஊக்குவித்தது என்பதற்கு, இவற்றைப் போல் இன்னும் சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயத்தில் கடைநிலையில் இருப்போர்மீது எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதற்கு, இந்த துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து உரையாடியதைக் குறிப்பிடலாம். ஈராக், சிரியா, மத்திய கிழக்குப் பகுதி, ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் இடம்பெறும் மோதல்களால் துருக்கியில் புலம்பெயர்ந்துவாழும் மக்களில் ஏறக்குறைய ஐம்பது பேர்கொண்ட ஒரு குழுவையும் சந்தித்தார் திருத்தந்தை. இவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இவ்விடங்களில் நடைபெறும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு அனைத்துலக அளவில் ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்தார். நீதிக்காகவும் அமைதிக்காவும் உழைப்பவர்கள் சோர்வுறாமல் மனத்தாராளத்துடன் தொடர்ந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். புலம்பெயர்ந்துள்ள இளையோரை உற்சாகப்படுத்தி, இறைவனின் துணையோடு வருங்காலத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து நோக்குமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கியிலிருந்து திரும்பிய விமானப் பயணத்தில் அவரோடு பயணம் செய்த பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி நன்றி கூறியதோடு அவர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார். உலகெங்கிலும் இருக்கின்ற ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் 2016ம் ஆண்டில் நடத்தவுள்ள கூட்டம் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து வருவதற்கு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை. மேலும், துருக்கி அரசுத்தலைவர் எர்டோகான் அவர்களிடம் பேசியபோது, அனைத்துப் பயங்கரவாத வன்முறைகளுக்கு எதிராக, தலைவர்கள் தங்களின் கண்டனங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமெனத் தான் கேட்டுக்கொண்டாதகவும் பத்திரிகையாளர்களிடம் கூறினார் திருத்தந்தை. மொத்தத்தில் இந்த மூன்று நாள்கள் திருத்தூதுப் பயணம், பல்வேறு மதத்தவரின் இதயங்களில் மனித மதிப்பீடுகளை ஆழமாக வேரூன்றியுள்ளது என்று எம் வத்திக்கான் வானொலி நிருபர்கள் கருத்து தெரிவித்தனர். இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு உதவிவரும் துருக்கி நாட்டைப் பாராட்டவும் திருத்தந்தை மறக்கவில்லை.
துருக்கி நாடு 98 விழுக்காட்டு முஸ்லிம்களைக் கொண்டிருந்தாலும், அது சமயச்சார்பற்ற நாடு. உலகிலுள்ள முஸ்லிம் நாடுகளில், இஸ்லாம், அரசு மதமாக இல்லாத ஒரே நாடு துருக்கி. நாட்டின் அரசியல் அமைப்பில் சமய சுதந்திரமும், சமய சகிப்புத்தன்மையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நாட்டில் ஆர்மேனிய அப்போஸ்தலிக்க மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் திருஅவைகளும், ஆலயங்களும் உள்ளன. உரோமன் கத்தோலிக்க மற்றும் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கரும் உள்ளனர். யூதர்களும் வாழ்கின்றனர். துருக்கியின் 7 கோடியே 30 இலட்சம் மக்களில், 35 ஆயிரம் கத்தோலிக்கர் உட்பட ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் கிறிஸ்தவர்கள் மற்றும் 26 ஆயிரம் பேர் யூதர்கள். 2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நாட்டில், 140 கிரேக்க ஆர்த்தடாக்ஸ், 58 அசீரிய ஆர்த்தடாக்ஸ், 52 ஆர்மேனிய ஆர்த்தடாக்ஸ் என 349 கிறிஸ்தவ சபைகள் உள்ளன என்று துருக்கியின் உதவிப் பிரதமர் Bekir Bozdag அவர்கள் கூறியுள்ளார். எனினும், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாத வன்முறைகள் இடம்பெறும் இக்காலத்தில், துருக்கியிலும் இதன் தாக்கம் காணப்படுவதாகவும், துருக்கியில் இஸ்லாம் மதத்தின் பங்கு என்ன என்ற விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இன்றையத் துருக்கி நாட்டுக்கு இது ஒரு முரண்பாடான பிரச்சனையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இயேசு கிறிஸ்து சிலுவை மரணம் அடைந்த பின்னர் எருசலேமில் அடக்குமுறைக்கு அஞ்சி பல கிறிஸ்தவர்கள் ஆசிய மைனருக்கு வந்தனர். எபேசு, Hierapolis, கப்பதோக்கியா போன்ற தற்போதைய துருக்கி நகரங்களில் அவர்கள் குடியேறினர். இந்நாட்டில் புனித பவுலடிகளாரும், Perge, Derbe, Lystra, Psidian Antioch, Ephesus, Konya போன்ற நகரங்களில் போதித்தார். புனித யோவான் இயேசுவின் தாயான அன்னை மரியாவுடன் சிறிது காலம் எபேசில் தங்கினார். பின்னர் அவர் பாத்மோஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் எபேசு வந்து அங்கு இறந்தார். புனித பேதுரு அந்தியோக்கியா நகரில் வாழ்ந்தார். இந்த அந்தியோக்கியாவில்தான் சீடர்கள் முதன்முதலில் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள். இங்கு புனித பேதுரு முதல் கிறிஸ்தவ ஆலயத்தை ஒரு குகையில் செதுக்கினார். திருத்தூதர் பிலிப், Hierapolisல் வாழ்ந்தார். பின்னர் உரோமையர்களால் குடும்பத்தோடு கொல்லப்பட்டார். முதலாம் Theodosius ஆட்சிக் காலத்தில், 380ம் ஆண்டில் கிறிஸ்தவம் அரசு மதமாக அறிவிக்கப்பட்டது. பிற தெய்வ ஆலயங்களை அழிப்பதும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. துருக்கியின் Nicea நகரில், அதாவது தற்போதைய Iznik நகரில் முதல் கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள் நடந்தன. இப்படி பல நூற்றாண்டுகளாக குப் பின்னர் துருக்கியை முஸ்லிம்கள் கைப்பற்றினர். கிறிஸ்தவம் மெல்ல மெல்ல அழிந்தது. முதல் உலகப் போர் மற்றும் துருக்கிக் குடியரசு நிறுவப்பட்ட காலத்தில், முப்பது இலட்சம் துருக்கிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்த துருக்கியில் தற்சமயம் அந்நிலை கிடையாது.
எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட துருக்கி உலக வரைபடத்தில் ஒரு தனியிடத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்நாடு ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் உள்ளது. இப்படி இரு கண்டங்களிலும் இந்நாடு இடம்பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ள நகரம் இஸ்தான்புல். இது இந்நாட்டின் மிகப்பெரிய நகரம். அதோடு அதன் வரலாறும் சிறப்புமிக்கது. இஸ்தான்புலிலுள்ள Bosphorus நீர்க்கால்வாய், ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே எல்லையாக அமைந்துள்ளது. இந்த நீர்க்கால்வாய், கருங்கடலையும், மார்மராக் கடலையும் இணைக்கின்றது. இது, உலகிலே, அனைத்துலக அளவில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் மிகக் குறுகிய நீர்க்கால்வாயாகவும் உள்ளது. 30 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்க்கால்வாயின் வடக்கு நுழைவாயில் 3700 மீட்டர் அகலம் கொண்டது. இதன் மிகக் குறைந்த அகலம் 700 மீட்டர் ஆகும். இதன் ஆழம் 13 மீட்டர் முதல் 110 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது. இஸ்தான்புல் நகரம், Bosphorus நீர்க்கால்வாயின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளது.
கிரேக்க காலனியாளர்களால் கி.மு. 667ம் ஆண்டில் இஸ்தான்புல் நகரம் உருவாக்கப்பட்டது. கிரேக்கர்களின் அரசர் Byzantas என்பவரைக் கவுரவிக்கும் விதமாக, இஸ்தான்புல் நகரம் Byzantium என அழைக்கப்பட்டது. பின்னர், கி.பி.196ம் ஆண்டில் உரோமைப் பேரரசின்கீழ் இந்நகரம் வந்தது. கி.பி.330ம் ஆண்டு மே 11ம் தேதியன்று உரோமைப் பேரரசர் பெரிய கான்ஸ்ட்டைன், இந்நகரை பைசான்டைன் பேரரசின் அல்லது கீழை உரோமன் பேரரசரின் தலைநகராக அறிவித்தபோது, இந்நகர் கான்ஸ்டான்டிநோபிள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் என்றால், கான்ஸ்ட்டைன் நகர் என்று அர்த்தமாகும். இதனை புதிய உரோம் என்றுகூட அழைத்தனர். மத்திய காலத்தில் இந்நகரம், ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் பணக்கார நகரமாக விளங்கியது. உரோமைப் பேரரசு, உலகின் கிழக்கில் பரவுவதற்கும், கிரேக்க கலாச்சாரமும், கிறிஸ்தவமும் பரவுவதற்கும் இந்நகர் முக்கிய மையமாக இருந்தது. அக்காலத்தில் புனித சோஃபியா புகழ்பெற்ற ஆலயம் உட்பட எண்ணற்ற கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன. உரோமைப் பேரரசர் பெரிய ஜூஸ்தீனியன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புனித சோஃபியா ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய பேராலயமாக விளங்கியது.
இறை ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித சோஃபியா ஆலயம், அது கட்டப்பட்ட கி.பி.537ம் ஆண்டு முதல் 1453ம் ஆண்டுவரை கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் பேராலயமாகவும், அத்திருஅவையின் தலைமையிடமாகவும் விளங்கியது. ஆயினும், இடைப்பட்ட காலத்தில், அதாவது, 1204ம் ஆண்டு முதல் 1261ம் ஆன்டுவரை இப்பேராலயம் இலத்தீன் பேரரசின்கீழ், உரோமன் கத்தோலிக்கப் பேராலயமாகவும் இருந்தது. ஆயினும், 1453ம் ஆண்டு மே 29ம் தேதி நான்காவது சிலுவைப்போரின்போது, ஒட்டமான்களால் கான்ஸ்டான்டிநோபிள் நகரம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. முஸ்லிம் பேரரசர் 2வது Mehmed தலைமையில் இத்தாக்குதல் நடைபெற்றது. பின்னர் இந்நகரம், ஒட்டமான் பேரரசின் தலைநகராக மாறியது. ஒட்டமான் சுல்தான்கள் தொடர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு இந்நகரை ஆட்சி செய்தனர். நகரின் பெயரும் இஸ்தான்புல் என மாறியது. இஸ்தான்புல் என்றால், ”நகருக்கு” என்று அர்த்தமாகும். கான்ஸ்டான்டிநோபிள் நகரில் கிறிஸ்தவ அடையாளங்கள் அனைத்தும் இஸ்லாம் கலாச்சாரமாக மாற்றப்பட்டன. புனித சோஃபியா பேராலயம், 1453ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதியன்று மசூதியாக மாற்றப்பட்டது. இந்நிலை 1931ம் ஆண்டுவரைத் தொடர்ந்தது. பின்னர் 1935ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியன்று Hagia Sophia அதாவது சோஃபியா அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. முதல் உலகப் போரின்போது 1922ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று ஒட்டமான் பேரரசு கவிழ்ந்தது. காலிஃபா ஆட்சிமுறை வீழ்ந்தது. 1923ம் ஆண்டில் துருக்கி குடியரசு உருவானது. அப்போது தலைநகர் அங்காராவுக்கு மாற்றப்பட்டது. துருக்கியின் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்றின் மையமாக விளங்கும் இஸ்தான்புல் நகரின் வர்த்தக மற்றும் வரலாற்று மையங்கள், இதன் ஐரோப்பியப் பகுதியில் உள்ளன. ஒரு கோடியே 41 இலட்சம் மக்கள் வாழும் இந்நகரம், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகப் பெரியதும், உலகின் ஆறாவது பெரிய நகரமாகவும், உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐந்தாவது பெரிய நகரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் நகருக்கு, 2012ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 16 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பாலமாக அமைந்துள்ள இஸ்தான்புல் நகரத்தில், இதே பண்புகளுடன் வாழ்ந்த புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை துருக்கி நாடு மறப்பதே இல்லை. 1935ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டுவரை துருக்கியில் திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய ஆஞ்சலோ ரொன்காலி என்ற இயற்பெயரைக் கொண்ட புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், துருக்கியில், இரு உலகங்களுக்கு இடையே, கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையே பாலமாகப் பணியாற்றியவர். துருக்கியில் இத்திருத்தந்தை பணியாற்றிய பத்து ஆண்டுகளில் துருக்கி அரசு அதிகாரிகளுடன் நட்புறவைக் கொண்டிருந்தவர். அவருக்குப் பின்வந்த திருத்தந்தையர்களும் இந்த நட்புறவை தொடர்ந்து வளர்த்து வந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இந்த நட்புறவை ஆழப்படுத்தி வருகிறார் என்பதை, அவரின் துருக்கித் திருத்தூதுப் பயணம் வெளிப்படுத்தியுள்ளது. கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணையட்டும், மதங்களிடையே உரையாடல் ஊக்குவிக்கப்பட்டு நல்லுறவுகள் வளரட்டும். மதத்தின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகள் நிறுத்தப்படட்டும் என்ற திருத்தந்தையின் விருப்பம் நிறைவேறுவதாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.