2014-12-01 16:22:44

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் இணைந்து நடக்கிறது திருஅவை


டிச.01,2014. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையானவற்றை ஆற்றுவது மட்டுமல்ல, அவர்களோடு இணைந்து நடப்பதும் கத்தோலிக்கத் திருஅவையின் முக்கியப் பணியாக உள்ளது என அறிவிக்கிறது அனைத்துலக கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
'இடைவெளியை அகற்றுவோம்' என்ற தலைப்புடன் இம்மாதம் முதல் தேதி, திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் நோயாளர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ள 3 கோடியே 90 இலட்சம் மக்களின் நினைவுகளை கௌரவிக்கும் விதமாக, அவர்களின் உறவினர்க்கான பணியாக உள்ளன எனத் தெரிவித்துள்ளது.
இன்றைய உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 50 இலட்சம் பெரியோரும் குழந்தைகளும், எய்ட்ஸ் நோய்க்கெதிரான மருந்துக்களை வாங்கமுடியா நிலையில் ஏழ்மையில் வாடும்போது, பணம் இருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் முக்கியத்துவம் பெறுகிறது என தன் செய்தியில் கூறியுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
ஏழ்மை மற்றும் நோயுறுதலுக்கான காரணங்களை பிறர்மீது சுமத்துவதன் வழியே தப்பிக்க முயலும் நம் உள்ளார்ந்த போக்குகளையும் மாற்றவேண்டும் எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.