2014-11-30 14:59:10

துறவிகளிடம் திருத்தந்தை : உங்கள் வலைகளைவிட்டு வெளியேறுங்கள்


நவ.30,2014. நவம்பர் 30, இஞ்ஞாயிறன்று உலக அர்ப்பண வாழ்வு ஆண்டைத் தொடங்கியுள்ள துறவியர்க்கு, இச்சனிக்கிழமை மாலை உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் திருவழிபாடு நடந்தது. அச்சமயத்தில் காணொளிச் செய்தி வழியாகப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துறவிகள் தங்கள் வலைகளைவிட்டு வெளியேறி மூலைமுடுக்கெல்லாம் நற்செய்தியை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். திருஅவைக்கும் உலகுக்கும் வழங்கப்பட்டுள்ள அர்ப்பண வாழ்வு என்ற விலைமதிப்பில்லாக் கொடைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார். அழைப்பு எனும் கொடைக்கும், இறைவாக்குப் பணியை உயிர்த்துடிப்புடையதாக்குவதற்கும் திருஅவையுடன் சேர்ந்து கொண்டாடுவதற்கான சிறப்பான நேரம் இது. அர்ப்பண வாழ்வு வாழும் துறவியர் தங்கள் வாழ்வில் கிறிஸ்துவை மையமாக வைத்து, தொடர்ந்து அவரைத் தேடுவதன்மூலம் உலகை விழித்தெழச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார். துறவியர், தாங்கள் கிறிஸ்துவின் கரங்களால் தொடப்படவும், அவரது குரலால் வழிநடத்தப்படவும், அவரது அருளால் உறுதிபெறவும் தங்களைக் கையளிக்க வேண்டும். ஆயினும் இது எளிதல்ல. ஆதலால் நற்செய்தியை எப்பொழுதும் தங்களின் ஆரம்பமாகக் கொண்டு அதனை தங்களின் அன்றாட வாழ்வில் எளிமையாலும் ஒத்திணங்கிய வாழ்வாலும் செயல்படுத்த வேண்டும். அதனைக் கருத்தியல் கோட்பாடாக மாற்றும் சோதனையை விலக்குமாறும் பரிந்துரைத்தார். நற்செய்தி, துறவியரின் வாழ்வையும் பணியையும் இளமைத்துடிப்புள்ளதாக ஆக்குகின்றது. எனவே நற்செய்தியை வாழ்வது துறவியரின் வாழ்வுக்கும் பணிக்கும் அடித்தளமாகவும், மேற்கோள் காட்டுவதாகவும் உள்ளது. கிறிஸ்துவால் சந்திக்கப்பட உங்களை அனுமதித்து உங்கள் வலைகளைவிட்டு வெளியேறுங்கள். அப்போது அவர் உங்களை, பிறரை நோக்கி, அதிகம் தேவையில் இருப்போர் நோக்கி நடத்துவார். அன்னை மரியா இந்த அர்ப்பண வாழ்வு ஆண்டில் உங்களுடன் வழிநடப்பாராக என்றும் கூறினார் திருத்தந்தை.
உலக அர்ப்பண வாழ்வு ஆண்டு, 2016ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.