2014-11-30 14:58:35

துருக்கித் திருத்தூதுப் பயணம் – 2வது நாள் மாலை நிகழ்வுகள்


நவ.30,2014. மதங்களிடையே உரையாடலையும், கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே ஒன்றிப்பையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் துருக்கி நாட்டுக்கு, இவ்வெள்ளி முதல் இஞ்ஞாயிறு வரை மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தின் இரண்டாவது நாள் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களிடம் கேட்டுப் பெற்ற ஆசீர், இந்த நோக்கத்தைத் தெளிவாகக் காட்டியது எனக் கூறலாம். இச்சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இஸ்தான்புல் தூய ஆவி பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், மாலை 5.15 மணிக்கு, இஸ்தான்புல் நகரிலுள்ள Phanar புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார் திருத்தந்தை. இதில் உரையாற்றிய பின்னர், முதுபெரும் தந்தையிடம் ஒரு தயவு கேட்பதாகச் சொல்லி, “தன்னையும், உரோம் திருஅவையையும் ஆசீர்வதிக்குமாறு” முதுபெரும் தந்தையின் முன்னர் சிரம் தாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும், திருத்தந்தையின் தலையில் சிலுவை வரைந்து முத்தி செய்தார். 78 வயதான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 74 வயது முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களிடம் ஆசீர் பெற்றார். இந்நிகழ்வு பற்றி, இஸ்தான்புல் நகரில் பத்திரிகையாளரிடம் கூறிய திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி, தனது மற்றொரு கிறிஸ்தவ சகோதரரான முதுபெரும் தந்தையிடம் திருத்தந்தை ஆசீர் கேட்டது இது முதன்முறை அல்ல, ஆனால், முதுபெரும் தந்தை, திருத்தந்தையின் தலையை முத்தி செய்தது இதுவே முதன்முறை என்றும், முதுபெரும் தந்தையின் அழைப்பின்பேரிலே திருத்தந்தை இவ்விழா வழிபாட்டில் கலந்து கொண்டார் என்றும் கூறினார்.
திருத்தந்தையின் இந்த திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, இந்த வழிபாட்டுக்கென சிறப்பான செபங்களைத் தயாரித்தது கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவை. இவ்வழிபாடு முடிந்து இவ்விரு தலைவர்களும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினர். இச்சனிக்கிழமை மாலை புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டைத் தலைமையேற்று நடத்திய முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் ஆற்றிய மறையுரையில்...
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மகிழ்வோடு வரவேற்கிறேன். பழைய உரோமையிலிருந்து புதிய உரோம் நோக்கி அடியெடுத்து வைத்துள்ள திருத்தந்தையின் இப்பயணம், கிழக்கையும் மேற்கையும் அடையாளப்பூர்வமாக இணைப்பதாக உள்ளது. புனித உரோம் திருஅவை, ஆர்த்தடாக்ஸ் திருஅவையோடு, உடன்பிறப்பு உணர்வுடன் உறுதியான உறவை நோக்கிச் செல்வதற்கு திருத்தந்தையின் இப்பயணம் சான்றாக உள்ளது. புனிதர்கள் கிரகரி மற்றும் ஜான் கிறிஸ்சோஸ்தமின் போதனையில், முதல் ஆயிரம் ஆண்டுகளின் நமது பொதுவான விசுவாசம் நிறுவப்பட்டது. நம் திருஅவைகளுக்குள் கிறிஸ்து விரும்பிய ஒன்றிப்பு ஏற்பட இவ்விரு தந்தையரும் நமக்காகப் பரிந்து பேசுவார்களாக. இதன்மூலம், மனித சமுதாயத்துக்கும், உலகுக்கும் நெருக்கடி நேரங்களில் நாம் இறைவிருப்பத்தை நிறைவேற்றுவோம். இப்பயணத்துக்கு மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.....

என்று முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறினார். திருத்தூதர் புனித அந்திரேயாவின் வழிவருபவராக, கான்ஸ்டான்டிநோபிளின் 270வது முதுபெரும் தந்தையாக, 1991ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பொறுப்பேற்றவர் முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள். கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவை, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவை என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருஅவை, உலகின் 14 ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளில் ஒன்றாக உள்ளது. இத்திருஅவையின் தலைவர் கான்ஸ்டான்டிநோபிளின் முதுபெரும் தந்தை. முன்னாள் உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியின் தலைநகரான கான்ஸ்டான்டிநோபிளில் இதன் தலைமைப்பீடம் இருப்பதாலும், நவீனகால ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் தாய்த் திருஅவையாக இது செயல்படுவதாலும், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, உலகின் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளின் தலைவர்களில், முதல்வராக நோக்கப்படுகிறார். அதாவது “சமமானவர்களில் முதல்வர்” என்ற சலுகையை இவர் அனுபவிக்கிறார். 1453ம் ஆண்டில் ஒட்டமான் முஸ்லிம்கள் கான்ஸ்டான்டிநோபிள் நகரைக் கைப்பற்றியபோது, இந்நகரின் பெயரை இஸ்தான்புல் என மாற்றினர். எனவே தற்போதைய இஸ்தான்புல் நகரமே முற்காலத்தைய கான்ஸ்டான்டிநோபிள் நகரமாகும். இதன் முதுபெரும் தந்தை, உலகின் முப்பது கோடி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவராவார். 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட பெரும் பிளவில் கான்ஸ்டான்டிநோபிள் ஆர்த்தாடக்ஸ் திருஅவை உருவானது. திருத்தூதர் பேதுருவின் சகோதரராகிய திருத்தூதர் புனித அந்திரேயா, இயேசுவின் முதல் சீடர், ஆர்த்தடாக்ஸ் சபையைத் தோற்றுவித்தவர் மற்றும் அச்சபையின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார். இவரின் விழாவை முன்னிட்டு அத்திருஅவையின் புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற மாலை வழிபாட்டில் திருத்தந்தையும் உரையாற்றினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று இஸ்தான்புல் நகரில் மேற்கொண்ட திருத்தூதுப் பயண நிகழ்வுகள் முற்றிலும் செழுமையான மத அடையாளத்தைக் கொண்டிருந்தன. ஒட்டமான் பேரரசின் கலைவண்ணத்தின் தலைசிறந்த வேலைப்பாடாக உயர்ந்து நிற்கும் நீல மசூதி என்ற சுல்தான் அகமது மசூதிக்குச் சென்றார் திருத்தந்தை. அங்கு இஸ்தான்புல் தலைமை Mufti, Rahmi Yaran அவர்கள், முஸ்லிம் செபம் ஒன்றைச் செபித்தபோது, திருத்தந்தையும் கைகளைக் கூப்பி மெக்கா இருக்கும் கிழக்குப் பக்கம் திரும்பி அமைதியாகச் செபித்தார். இது ஓர் அழகான பல்சமய உரையாடலின் நேரமாக இருந்தது. 2006ம் ஆண்டில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இதே நாளில் இவ்விடத்தில் இவ்வாறே செபித்தார். எனவே இனிமையான பல்சமய உறவை வெளிப்படுத்திய நாளாக, திருத்தந்தையின் இரண்டாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.