2014-11-29 15:35:44

மதத்தலைவர்களுடன் திருத்தந்தை : வன்முறைகளை மதம்வழி நியாயப்படுத்த முயல்வது கண்டிக்கத்தக்கது


நவ.29,2014. இஸ்லாம் மதத்தையும் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்த அரசியல் மற்றும் மதத்தலைவர்களை இந்த இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள பல்வேறு மதத்தலைவர்களைச் சந்திப்பது திருத்தந்தையர்களின் பயணத்திட்டத்தில் இடம்பெறும் ஒன்றாக எப்போதும் இருந்து வருகிறது. உரையாடல்களுக்கும் சந்திப்புக்கும் இணக்கமான மனநிலை இல்லையெனில், அந்தத் திருத்தூதுப்பயணம் தன் நோக்கத்தோடு இணங்கிச் செல்வதாக இருக்காது. இதே எண்ணத்தோடு எனக்கு முந்தைய திருத்தந்தையர்களின் பாதையில் நடைபோடும் நானும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே இடத்தில் உங்களைச் சந்தித்ததை நினைவு கூருகிறேன்.
மதத்தலைவர்களிடையேயான கலந்துரையாடல்களும் நல்லுறவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மதங்களிடையே வேறுபாடுகள் இருப்பினும், ஒருவரை ஒருவர் மதித்து நட்புணர்வுடன் வாழமுடியும் என்பதை அவை காட்டுகின்றன. இன்றைய உலகின் சில இடங்களில் காணப்படும் நெருக்கடி நிலைகளைக் காணும்போது, இந்த நட்புணர்வின் அர்த்தமும் அத்தியாவசியமும் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றன. போர்கள், அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதுடன், பேரழிவுகளையும், இனங்களிடையே, மதங்களிடையே பதட்டநிலைகளையும், மோதல்களையும், பல ஆயிரம் மக்களைப் பாதிக்கும் ஏழ்மை, பசி போன்றவைகளையும், காற்று, நீர், நிலம் ஆகியவைகளின் இயற்கை அழிவுகளையும் கொணர்கின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் மோதல்களால் விளைந்துள்ள துன்பங்கள் தாங்கமுடியா நிலையில் உள்ளன. வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகள், முதியோர், தாய்மார்கள் மற்றும் அகதிகளை இந்த நேரத்தில் நான் நினைவுகூர்கின்றேன்.
தீவிரவாத மற்றும் அடிப்படைவாதக் குழுக்களின் போக்குகளால் சில சமூகங்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்களும் Yazidis மக்களும் தங்களின் இன மற்றும் மதக் காரணங்களுக்காக வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பங்களை அனுபவிக்கின்றனர். தங்கள் வாழ்வையும் விசுவாசத்தையும் காப்பதற்காக இவர்கள் பலவேளைகளில் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த வன்முறைகளால் பலவேளைகளில் மத வழிபாட்டுத் தலங்களும் கலாச்சார இடங்களும் அழிவுக்குள்ளாகின்றன. மதத்தலைவர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தகைய மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பிற்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். இறைவனின் கொடையான மனித வாழ்வு தன்னிலையிலேயே புனிதத்தன்மையுடையது என்பதால், மதத்தின்வழி நியாயப்படுத்த முயலும் எந்த வன்முறையும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும். ஏனெனில், இறைவனே வாழ்வு மற்றும் அமைதியின் தலைவர். இறைவனை வழிபடுவதாகக் கூறிக்கொள்ளும் மக்கள் தங்கள் அயலார்களுடன், இனம், மதம், கலாச்சாரம் மற்றும் கொள்கை வேறுபாடுகளையும் தாண்டி, சகோதர சகோதரிகளாக வாழவல்லவர்களாக இருக்கவேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது. வன்முறைகளுக்கு எதிராக நாம் உழைக்கும் அதேவேளை, இதற்கான தீர்வுகளைக் காணவும் முயல வேண்டும். அரசு மற்றும் மதத்தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், நல்மனதுடைய ஆண்கள், பெண்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இதற்குத் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு மதத்தவரும் தங்களின் பாரம்பரிய மதிப்பீடுகளை வலியுறுத்துவதன் மூலம் இதற்கு உயிர்த்துடிப்புடைய சிறப்புப் பங்காற்ற முடியும். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்களிடம் விலைமதிப்படமுடியாத ஆன்மீகச் செல்வங்களைக் கொண்டுள்ளனர். இதில் நம் பொதுக்கூறுகளான, கருணைக்கடலாம் இறைவனை வழிபடுவது, முதுபெரும் தந்தையாக ஆபிரகாமைக் கொண்டிருப்பது, செபம், ஏழைகளுக்கு ஈதல், உண்ணா நோன்பிருத்தல் போன்றவைகள் உண்மையாகவே வாழப்பட்டால், அது நம் வாழ்வை மாற்றுவதுடன், மாண்பும் சகோதரத்துவமும் நிரம்பிய அடித்தளத்தை நிச்சயமாக வழங்கும். ‘நம் மதங்களிடையேயான கலந்துரையாடல்களின் துணைகொண்டு நம் பொது ஆன்மீகப் பாரம்பரியத்தை ஏற்று வளர்ப்பதன்வழி, ஒழுக்க மதிப்பீடுகள், அமைதி, மற்றும் சமூக விடுதலையை ஊக்குவிக்கவும் நிலைநாட்டவும் உதவ முடியும்’ (அங்காராவில் திருத்தந்தை புனித 2ம் ஜான் பால், 1979 நவம்பர் 29ல் கூறிய வார்த்தைகள்). ஒவ்வொருவரின் மனித வாழ்வின் புனிதத்தன்மையை ஏற்பதே ஒருமைப்பாடு, கருணை, உதவி ஆகியவைகளுக்கு அடித்தளமாக உள்ளது. மோதல்களால் அகதிகளாகியுள்ள மக்களுக்கு இந்நாட்டின் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் செய்துவரும் உதவிகளை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். இந்த எடுத்துக்காட்டுத் தொடரவேண்டும். அதேவேளை, இங்குள்ள இஸ்லாமிய அவைக்கும், மதங்களிடையேயான திருப்பீட கலந்துரையாடல் அவைக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவுக்கு ஊக்கமளிப்பதோடு, இது மேலும் தொடர்ந்து, அமைதி, பாதுகாப்பு மற்றும் வளம் நோக்கி ஏங்கிக்கொண்டிருக்கும் உலகிற்கு நல்லதொரு நம்பிக்கையின் அடையாளமாக இருப்பதாக. உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவிப்பதோடு, என் செபங்களுக்கான உறுதியையும் வழங்குகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.