2014-11-29 15:54:51

புனித சோஃபியா அருங்காட்சியகம்


நவ.29,2014. இறைஞானத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பசிலிக்காவை, கி.பி. 360ம் ஆண்டில் கான்ஸ்ட்டைன் பேரரசர் கட்டினார். 404 மற்றும் 532ம் ஆண்டுகளில் தீயினால் சேதமடைந்த இந்த பசிலிக்காவை, பேரரசர் ஜூஸ்தீனியன் மீண்டும் அழகுற அமைத்தார். உரோமைப் பேரரசரின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கொண்டுவரப்பட்ட விலைமதிப்பில்லா பொருட்களையும், மிக அழகான பளிங்கு கற்களையும், பத்தாயிரம் பணியாளர்களையும், நூறு மேற்பார்வையாளர்களையும் கொண்டு ஆறு ஆண்டுகளில் இந்த புனித சோஃபியா பசிலிக்கா புதுப்பிக்கப்பட்டது. இறைவனின் படைப்பின் மேன்மையைச் சித்தரிக்கும் விதமாக இது அமைக்கப்பட்டது. இது 537ம் ஆண்டில் திருப்பொழிவு செய்யப்பட்டபோது இதன் அழகை வியந்த பேரரசர் ஜூஸ்தீனியன், ஓ சாலமோனே, உன்னையும் இது மிஞ்சிவிட்டது எனப் பரவசமடைந்தார். 1453ம் ஆண்டில் 2ம் முகமதுவிடம் இந்நகரம் வீழ்ந்தபோது, இக்கிறிஸ்தவ பசிலிக்கா மசூதியாக மாற்றப்பட்டது. சுல்தான்களிடமிருந்து பெற்ற விலைமதிப்பற்ற நன்கொடைகளால் இவ்விடம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாகவும் மாறியது. புனித சோஃபியா அருங்காட்சியகத்தின் அழகைப் பார்த்து வியந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில், முதலில் கிரேக்கத்தில் “இறைவனின் புனித சோஃபியா”(Αγία Σοφία του Θεού) என்று எழுதினார். பின்னர், இலத்தீனில் "ஆண்டவரே, உமது உறைவிடம் எத்துணை அருமையானது" தி.பா.84 (Quam dilecta tabernacula tua Domine, (Psalmus 83), Franciscus) என்று எழுதி கையெழுத்திட்டார். இந்தப் புனித இடத்தின் அழகையும், அமைதியையும் தியானிக்கும்போது, அனைத்து அழகுக்கும் ஊற்றும் முதலுமான எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எனது ஆன்மா எழும்புகிறது. உண்மை, நன்மைத்தனம் மற்றும் அமைதியின் பாதையில் மனித சமுதாயத்தின் இதயங்களை எப்போதும் வழிநடத்தும் என இறைவனிடம் செபிக்கின்றேன் எனவும் எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.