2014-11-29 15:54:30

திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம் - இரண்டாவது நாள் நிகழ்வுகள்


நவ.29,2014. துருக்கி சமுதாயத்துக்கு அமைதியின் திருப்பயணியாகவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கிய சாட்சியாகவும் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாவது நாள் நிகழ்வுகளைத் தொடங்கினார். அங்காரா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று எசம்போவா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நகருக்குப் புறப்பட்டார். ஒரு மணி நேரம் விமானப் பயணம் செய்து இஸ்தான்புல் அத்தாதுதுர்க் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த திருத்தந்தையை, கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ மற்றும் இஸ்தான்புல் ஆளுனர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில், இஸ்தான்புல் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுல்தான் அகமது மசூதிக்குச் சென்றார் திருத்தந்தை. இவ்விடத்தின் முகப்பிலே அம்மசூதியின் பெரிய Mufti மற்றும் இமாம் தலைவர்கள் திருத்தந்தையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அதிகாரிகளுடன் துணையுடன் இவ்விடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை. இஸ்தான்புலிலுள்ள மசூதிகளில் மிக முக்கியமானதாகிய நீல மசூதி, சுல்தான் முதலாம் அகமது ஆட்சி காலத்தில் எட்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு 1617ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதன் உட்புறச் சுவர், மேல் கூரை என அனைத்தும் நீலநிறப் பளிங்குக் கற்களால் ஆனது. இதனால் இது நீல மசூதி என்றும் அழைக்கப்படுகிறது.
இஸ்தான்புல் நகரின் நீல மசூதியைப் பார்வையிட்ட பின்னர், அந்நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க Hagia Sophia அல்லது புனித சோஃபியா அருங்காட்சியகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித சோஃபியா அருங்காட்சியகத்தின் அழகைப் பார்த்து வியந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில், முதலில் கிரேக்கத்தில் “இறைவனின் புனித சோஃபியா”(Αγία Σοφία του Θεού) என்று எழுதினார். பின்னர், இலத்தீனில் "ஆண்டவரே, உமது உறைவிடம் எத்துணை அருமையானது" தி.பா.84 (Quam dilecta tabernacula tua Domine, (Psalmus 83), Franciscus). என்று எழுதி கையெழுத்திட்டார். இந்தப் புனித இடத்தின் அழகையும், அமைதியையும் தியானிக்கும்போது, அனைத்து அழகுக்கும் ஊற்றும் முதலுமான எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எனது ஆன்மா எழும்புகிறது. உண்மை, நன்மைத்தனம் மற்றும் அமைதியின் பாதையில் மனித சமுதாயத்தின் இதயங்களை எப்போதும் வழிநடத்தும் என இறைவனிடம் செபிக்கின்றேன் எனவும் எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித சோஃபியா அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பின்னர் இஸ்தான்புல் நகரின் கத்தோலிக்கச் சமுதாயத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் மதிய உணவும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இஸ்தான்புல் நகரிலுள்ள தூய ஆவி இலத்தீன் வழிபாட்டுமுறைப் பேராலயம் சென்றார் திருத்தந்தை. 1846ம் ஆண்டில் திறக்கப்பட்ட இப்பேராலயத்தில் கி.பி.67 முதல் 69 வரை திருத்தந்தையாக இருந்தவரும் மறைசாட்சியுமான புனித லீனுஸ் திருப்பண்டம் உட்பட பல புனிதர்களின் திருப்பண்டங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரையும் ஆற்றினார்.
இந்திய நேரம் இச்சனிக்கிழமை மாலை 7.30 மணிக்குத் தொடங்கிய இத்திருப்பலியில் பிற வழிபாட்டுமுறைகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இத்திருப்பலியின் இறுதியில் இஸ்தான்புல் ஆயர் லூயிஸ் பெல்லாத்ரே அவர்கள் திருத்தந்தைக்கு நன்றியும் தெரிவித்தார். பல நிகழ்வுகளைக் கொண்ட இந்தக் குறுகியப் பயணத்தில் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்காக நன்றி கூறுகிறோம். இத்திருப்பலியில் கலந்துகொள்ள விரும்பினாலும், இயலாமல் தவிக்கும் பலரது சார்பில் நன்றி கூறுகிறோம்.
இஸ்தான்புல் நகரம் ஏற்கனவே உங்கள் முன்னவர்களான முத்திப்பேறு பெற்ற 6ம் பால், புனித 2ம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரை வரவேற்றுள்ளது. அனைத்திற்கும் மேலாக, எங்கள் வாழ்வைப் பகிர்ந்து, இந்நகரில் பணியாற்றி, தற்போது புனிதராக உயர்ந்துள்ள 23ம் ஜான் அவர்களை எங்களால் மறக்க முடியாது. அவரது புனிதர் பட்ட விழா ஆண்டில், அவருக்காக நாங்கள் பல விழாக்களைக் கொண்டாடினோம். இந்தக் கொண்டாட்டங்களில் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களும் கலந்துகொண்டது, நமது கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளின் ஒரு வெளிப்பாடாகத் திகழ்கிறது.
புனித 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையால், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும் பல்சமய உரையாடல் ஆகிய பணிகளை திறம்பட ஆற்ற இறைவன் எங்களுக்கு வழங்கும் வாரங்களுக்கு நன்றி கூறுகிறோம்.
இந்த திருத்தூதப் பயணத்தின் முக்கிய அம்சமாகிய கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களைச் சந்திப்பது இந்த 2வது நாள் பயணத் திட்டத்தில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.