2014-11-29 15:55:19

இரு கண்டங்களை இணைக்கும் உலகின் ஒரே நகரம்


நவ.29,2014. உலகில் இரு கண்டங்களை இணைக்கும் உலகின் ஒரே நகரமான இஸ்தான்புலிலுள்ள பாஸ்பொரஸ் நீர்க்கால்வாய், ஆசியாவையும், ஐரோப்பாவையும் இணைக்கின்றது. இந்த நீர்க்கால்வாய், கருங்கடலும், மார்மராக் கடலும் இணையும் இடத்தில் உள்ளது. கிரேக்க காலனியாளர்களால் கி.மு. 667ம் ஆண்டில் இஸ்தான்புல் நகரம் உருவாக்கப்பட்டது. கிரேக்கர்களின் அரசர் Byzantas என்பவரைக் கவுரவிக்கும் விதமாக, இஸ்தான்புல் நகரம் Byzantium என அழைக்கப்பட்டது. பின்னர், கி.பி.196ம் ஆண்டில் உரோமைப் பேரரசின்கீழ் இந்நகரம் வந்தது. கி.பி.330ம் ஆண்டு மே 11ம் தேதியன்று உரோமைப் பேரரசர் பெரிய கான்ஸ்ட்டைன், இந்நகரை பைசான்டைன் பேரரசின் அல்லது கீழை உரோமன் பேரரசரின் தலைநகராக அறிவித்தபோது, இந்நகர் கான்ஸ்டான்டிநோபிள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கான்ஸ்டான்டிநோபிள் என்றால், கான்ஸ்ட்டைன் நகர் என்று அர்த்தமாகும். இதனை புதிய உரோம் என்றுகூட அழைத்தனர். மத்திய காலத்தில் இந்நகரம், ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் பணக்கார நகரமாக விளங்கியது. உரோமைப் பேரரசு, உலகின் கிழக்கில் பரவுவதற்கும், கிரேக்க கலாச்சாரமும், கிறிஸ்தவமும் பரவுவதற்கும் இந்நகர் முக்கிய மையமாக இருந்தது. அக்காலத்தில் Hagia Sophia புகழ்பெற்ற ஆலயம் உட்பட எண்ணற்ற கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டன. உரோமைப் பேரரசர் பெரிய ஜூஸ்தீனியன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட Hagia Sophia ஆலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு உலகின் மிகப் பெரிய பேராலயமாக விளங்கியது.
ஆயினும், 1453ம் ஆண்டு மே 29ம் தேதி நான்காவது சிலுவைப்போரின்போது, ஒட்டமான்களால் கான்ஸ்டான்டிநோபிள் நகரம் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. முஸ்லிம் பேரரசர் 2வது Mehmed தலைமையில் இத்தாக்குதல் நடைபெற்றது. பின்னர் இந்நகரம், ஒட்டமான் பேரரசின் தலைநகராக மாறியது. ஒட்டமான் சுல்தான்கள் தொடர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு இந்நகரை ஆட்சி செய்தனர். நகரின் பெயரும் இஸ்தான்புல் என மாறியது. இஸ்தான்புல் என்றால், ”நகருக்கு” என்று அர்த்தமாகும். கான்ஸ்டான்டிநோபிள் நகரில் கிறிஸ்தவ அடையாளங்கள் அனைத்தும் இஸ்லாம் கலாச்சாரமாக மாற்றப்பட்டன. பின்னர் முதல் உலகப் போரின்போது 1922ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று ஒட்டமான் பேரரசு கவிழ்ந்தது. காலிஃபா ஆட்சிமுறை வீழ்ந்தது. 1923ம் ஆண்டில் துருக்கி குடியரசு உருவானது. அப்போது தலைநகர் அங்காராவுக்கு மாற்றப்பட்டது. துருக்கியின் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்றின் மையமாக விளங்கும் இஸ்தான்புல் நகரின் வர்த்தக மற்றும் வரலாற்று மையங்கள், இதன் ஐரோப்பியப் பகுதியில் உள்ளன. ஒரு கோடியே 41 இலட்சம் மக்கள் வாழும் இந்நகரம், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் மிகப் பெரியதும், உலகின் ஆறாவது பெரிய நகரமாகவும், உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஐந்தாவது பெரிய நகரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கலாச்சாரத் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்தான்புல் நகருக்கு, 2012ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 16 இலட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.