2014-11-28 15:46:03

உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு மடல்


நவ.28,2014. அர்ப்பண வாழ்வை மேற்கொண்டவர்கள், வரலாற்றை நன்றியோடு ஏற்கவும், நிகழ்காலத்தை ஆழ்ந்த ஆர்வத்தோடு வாழவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 30, இஞ்ஞாயிறு முதல், 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி முடிய கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று சிறப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அம்மடலின் சுருக்கம் இதோ:

அர்ப்பணிக்கப்பட்ட சகோதரிகளே, சகோதரர்களே,
'உன் சகோதரர்களை உறுதிப்படுத்து' (லூக்கா 22,32) என்று புனித பேதுருவுக்கு இயேசு கூறிய அறிவுரையின்படி, பேதுருவின் வழித்தோன்றல் என்ற முறையிலும், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள ஒரு சகோதரன் என்ற முறையிலும் நான் உங்களுக்கு இம்மடலை எழுதுகிறேன்.
2ம் வத்திக்கான் சங்கத்தால் உருவாக்கப்பட்ட 'மக்களின் ஒளி' (Lumen Gentium) என்ற ஏடு வெளியிடப்பட்ட 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியாக, உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் கொண்டாட நான் அழைப்பு விடுத்தேன். நவம்பர் 30, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று துவங்கும் இந்த உலக ஆண்டு, 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி, ஆண்டவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளன்று நிறைவுபெறும்.

இவ்வாறு துவங்கும் இச்சிறப்பு மடலில், திருத்தந்தை,
1. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்
2. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்
3. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்
என்ற மூன்று பகுதிகளில் தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

I அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்:

வரலாற்றை நன்றியோடு ஏற்பது, முதல் குறிக்கோள். ஒவ்வொரு துறவு சபையின் வரலாறும், தனி வரங்களும் செறிவுமிக்கவை. இச்செல்வங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது அவசியம். இந்த வரலாற்றில் உருவான குறைகளையும், சரியான கண்ணோட்டத்துடன் பார்த்து, பாடங்களைப் பயிலவேண்டும். குறிப்பாக, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகள், தூய ஆவியாரின் புதிய 'மூச்சுக் காற்று' ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் காண்பது மிகவும் அவசியம்.
நிகழ்காலத்தை ஆழமான ஆர்வத்துடன் வாழ்வது, 2வது குறிக்கோள். ஒவ்வொரு துறவுச் சபையையும் நிறுவியவர்கள், இயேசுவின் மீதும், அவரது பணியின் மீதும் கொண்டிருந்த ஆழமான ஆர்வம், நம் வாழ்வில் தொடர்ந்து வெளிப்படவேண்டும். இந்த ஆர்வம் நம்மிடையே குறைந்து, மங்கிப் போய்விட்டதா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு ஒரு தகுந்த வாய்ப்பு.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அரவணைப்பது, 3வது குறிக்கோள். மேற்கத்திய நாடுகளில் இறையழைத்தல் குறைந்து, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோரின் சராசரி வயது கூடியுள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், எதையும் நிரந்தரமற்றதாய் காணும் மனநிலை ஆகியவை, இன்றைய உலகில் வளர்ந்துள்ளன.
இத்தகையச் சூழலில், நமது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்பதை உணரவேண்டும். எண்ணிக்கை, வெற்றி என்று இவ்வுலகம் காட்டும் அளவுகோல், நமது நம்பிக்கையைப் பாதிக்காமல், இறைவனில் நம்பிக்கை கொள்ளவேண்டும். எல்லாமே அழிவு என்று இவ்வுலகம் பறைசாற்றும் கருத்துக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு, தன் குறிக்கோள்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, 2வது பகுதியில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புக்களாக 5 எண்ணங்களை முன்வைத்துள்ளார்:

II அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்:

1. அர்ப்பணிக்கப்பட்டோர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உலக மக்களைப் போலவே, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும் பிரச்சனைகள் உண்டு. ஆனால், இறைவனில் நம்பிக்கை கொண்டு, இந்தப் பிரச்சனைகளைத் தாண்டி, துறவியர் மகிழ்வை வெளிப்படுத்த வேண்டும்.
2. அர்ப்பணிக்கப்பட்டோர் இவ்வுலகை விழித்தெழச் செய்வர் என்று எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு துறவுச் சபைக்கும் வழங்கப்பட்டுள்ள தனி வரங்களின் அடிப்படையில் இவ்வுலகை மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு கனவுலகை (Utopia) அல்ல, மாறாக, ஒரு மாறுபட்ட உலகை உருவாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
3. 'ஒன்றிப்பின் அறிஞர்களாக' (experts of communion) அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வர் என்று எதிர்பார்க்கிறேன். தாங்கள் வாழும் குழுமங்களில் இந்த ஒன்றிப்பு துவங்கவேண்டும். புறம்பேசுதல், பொறாமை, வன்மம் ஆகியவை, துறவற இல்லங்களில் இருப்பதற்குத் தகுதியற்ற பண்புகள். துறவு சபைகள் ஒன்றோடொன்று ஒன்றிப்பை வளர்ப்பதையும் இவ்வாண்டு நான் எதிர்பார்க்கிறேன்.
4. அர்ப்பணிக்கப்பட்டோர், இவ்வாண்டில், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் செல்வதை எதிர்பார்க்கிறேன். துறவு இல்லங்களில் உருவாகும் கருத்து வேறுபாடுகளில் சிறைப்பட்டு போகாமல், சமுதாயத் தேவைகளை முன்னிறுத்தும் வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. திருஅவைக்கு, குறிப்பாக, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட துறவு சபைகள் ஒன்றிணைந்து வருவதை எதிர்பார்க்கிறேன். உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, ஒரு தனிப்பட்ட, உன்னத காலமாக இருக்க, இறையாவியாரின் அருளை எதிர்பார்க்கிறேன்.

இச்சிறப்பு மடலில், 'அர்ப்பண வாழ்வின் தொடுவானங்கள்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைப்பிட்டுள்ள மூன்றாவது பகுதியில், அர்ப்பண வாழ்வு, இன்னும் எவ்வாறு வேறு வழிகளில் தன் எல்லைகளை விரிவாக்க முடியும் என்பதை 5 கருத்துக்களாகப் பகிர்ந்துள்ளார்:

III அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்

1. அர்ப்பணிக்கப்பட்டோர் மட்டுமல்லாமல், போதுநிலையினருக்கும் நான் விண்ணப்பிக்கிறேன். துறவு சபைகள், பொது நிலையினரோடு இணைந்து பணியாற்றுவது வரலாற்று உண்மை. அர்ப்பண வாழ்வை வேறு வழிகளில் தேர்ந்துள்ள பொதுநிலையினருக்கும் நான் இந்த சிறப்பு ஆண்டில் விண்ணப்பிக்கிறேன். உங்கள் தனி வரங்களுடன் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருங்கள்.
2. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள துறவியருக்கு மட்டுமல்ல, மாறாக, அனைத்துலக திருஅவைக்கும் ஒரு சிறப்பான ஆண்டு.
புனிதர்களான பெனடிக்ட், பேசில், அகஸ்டின், பிரான்சிஸ், தோமினிக், லொயோலா இஞ்ஞாசியார், அவிலா தெரேசா, ஆஞ்செலா மெரிசி, வின்சென்ட் தே பால் ஆகியோர் இல்லாத திருஅவையை எண்ணிப்பார்க்க இயலாது. புனித ஜான் போஸ்கோ, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா என்று, இந்தப் பட்டியல் மிக நீளமானது. இத்தனைப் புனிதர்களின் உதவியால், திருஅவை வளர்ந்துள்ளதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல அனைவரையும் அழைக்கிறேன்.
3. கத்தோலிக்கப் பாரம்பரியத்தைச் சேராத கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்திலும் அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் இம்மடல் வழியே நான் அழைப்புவிடத் துணிகிறேன். இந்தச் சிறப்பு ஆண்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, இன்னும் தழைத்து வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
4. துறவு என்ற நிலைப்பாடு, அனைத்து பெரும் மதங்களில் காணப்படும் ஓர் உண்மை. அனைத்து மதங்களுடனும் இன்னும் ஆழமான உறவு வளர்வதற்கும் இவ்வாண்டு ஒரு வாய்ப்பாக அமையவேண்டும்.
5. இறுதியாக, என் சகோதர ஆயர்களுக்கு நான் விண்ணப்பிக்கிறேன். அர்ப்பண வாழ்வும், ஒவ்வொரு துறவுச் சபையின் தனிவரங்களும் திருஅவைக்கு இறைவன் வழங்கியுள்ள கொடைகள் என்பதை ஆயர்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, துறவுச் சபைகளை உற்சாகப்படுத்த அழைக்கிறேன்.

ஆழ்நிலை தியானம், ஆண்டவனுக்குச் செவிமடுத்தல் என்ற உன்னத பண்புகளின் எடுத்துக்காட்டான மரியன்னையிடம் இந்த உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டை ஒப்படைக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.