2014-11-27 14:32:40

புனிதரும் மனிதரே : மான் வேட்டையில் மனம் மாறியவர் (St. Hubert)


அன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து பலவாறு சித்ரவதைகள் அனுபவித்து இறுதியில் சிலுவையில் அறையுண்டு இறந்ததை நினைவுகூரும் நாள். அன்று கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, ஹூயுபெர்ட் என்பவர் மட்டும் காட்டில் வேட்டையாடுவதில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மான் ஒன்றை விரட்டிக்கொண்டு ஓடினார். ஓடிக்கொண்டிருந்த மான் திடீரென்று திரும்பி நின்றது. ஹூயுபெர்ட் வியந்து நின்றார். ஏனெனில் அந்த மானின் கொம்புகளுக்குமேல் சிலுவை ஒன்று தெரிந்தது. அதோடு, “நீ விரைவில் மனம் மாறி இறைவனின் பக்கம் திரும்பவில்லையென்றால் விரைவில் நீ நரகத்திற்குச் செல்வாய்” என்ற ஒரு குரலும் கேட்டது. புனித பவுலடிகளாரைப் போல, உடனடியாக தரையில் விழுந்து, “ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?” என்று கேட்டார் ஹூயுபெர்ட். நீ போய் ஆயர் லாம்பெர்ட்டைச் சந்தி. அவர் உனக்கு எல்லாவற்றையும் அறிவிப்பார் என்ற பதிலையும் கேட்டார் ஹூயுபெர்ட். உடனடியாக, Maastricht சென்று (நெதர்லாண்ட்) ஆயர் லாம்பெர்ட் அவர்களைச் சந்தித்தார். தனது பிறப்புரிமையையும், தனது மகனையும் தனது தம்பி ஓடோவிடம் ஒப்படைத்தார். தனது செல்வங்களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். அருள்பணியாளராக விரும்பிப் படித்து, குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். 708ம் ஆண்டில் பிரான்சின் Liège நகரின் முதல் ஆயராக நியமனம் செய்யப்பட்டார் ஹூயுபெர்ட். ஓய்வின்றி நற்செய்தி அறிவித்து 727ம் ஆண்டு மே 30ம் தேதி பெல்ஜியம் நாட்டின் Tervuerenல் இயற்கை எய்தினார். பிரான்சின் Liège நகர் புனித பேதுரு ஆலயத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 825ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதியன்று இவரது உடல் Amdain ஆசீர்வாதப்பர் ஆதீனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டது. இந்த நாளே இவரது விழா நாளாகச் சிறப்பிக்கப்படுகிறது. பிரான்சின் துலுசில் 656ம் ஆண்டில் பிறந்தவராகச் சொல்லப்படும் புனித ஹூயுபெர்ட், Aquitaine கோமகன் Bertrandன் மூத்த மகன். இவரின் தோற்றத்தைப் பார்த்த ப்ரெஞ்ச் அரசர் மூன்றாம் தியோட்ரிக் தனது அரண்மனையில் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். ஆடம்பரமான வாழ்வு வாழ்ந்தார் ஹூயுபெர்ட். Floribanne என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். Floribert என்ற மகனும் இவர்களுக்குப் பிறந்தனர். ஆனால் குழந்தை பிறப்பின்போது Floribanne இறந்தார். தனது மனைவி இறந்த பிறகு அரண்மனையைவிட்டு வெளியேறினார். வேட்டையாடுவதில் தனது துன்பத்தை மறந்தார். வேட்டையாடியபோது கடவுளால் தடுத்தாட்கொள்ளப்பட்டார் இவர். புனித ஹூயுபெர்ட், வேட்டையாடுபவர்கள், கணித மேதைகள், மூக்குக்கண்ணாடி வர்த்தகர்கள், கனிமத் தொழிலாளர்கள் போன்றோரின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.