2014-11-26 16:15:55

வன்முறைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொணரும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கைவிடுங்கள் - அமெரிக்க பேராயர் Robert Carlson


நவ.26,2014. வன்முறைகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொணரும் என்ற பொய்யான நம்பிக்கையைக் கைவிடுங்கள், வன்முறை, மேலும் வன்முறையை மட்டுமே வளர்க்கும் என்று அமெரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Missouri மாநிலத்தில், Ferguson என்ற நகரில், Michael Brown என்ற 18 வயது இளையவரை, சுட்டுக் கொன்ற Darren Wilson என்ற காவல்துறை அதிகாரியை, நீதி மன்றம் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நகரில் இத்திங்கள் முதல் கலவரங்கள் பரவின. இத்தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றன.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தக் கொலையைத் தொடர்ந்து, இளைஞன் Brown அவர்களின் குடும்பம் விடுத்த பல விண்ணப்பங்களையும் மீறி, பல்வேறு குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளன என்று St Louis பேராயர், Robert Carlson அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது என்று கூறிய பேராயர் Carlson அவர்கள், அமைதியும், நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்ற கருத்துடன், இச்செவ்வாய் மாலை, St Louis உயர்மறை மாவட்டப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தினார்.
கொல்லப்பட்ட இளைஞன் Brown அவர்களின் குடும்பத்திற்கும், காவல்துறை அதிகாரி Wilson அவர்களின் குடும்பத்திற்கும் செபிக்கும்படி பேராயர் Carlson அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.