2014-11-26 15:59:47

நவம்பர் 27, புனிதரும் மனிதரே : திருஅவை பணம் தன்னுடையதல்ல என்று கூறி மறைசாட்சியானவர் (St. Alphege)


பேராயரும் Canterburyன் முதல் மறைசாட்சியுமான புனித Alphege அவர்கள், 953ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து Gloucester துறவுமடத்தில் இணைந்தார். ஆனால் இவரின் விருப்பமெல்லாம், தனியாக ஒரு முனிவராக வாழ்ந்து, செப தபத்தில் ஈடுபடவேண்டும் என இருந்ததால், தன் துறவுமடத்தில் அதற்கான அனுமதி பெற்று, Somersetல் உள்ள ஒரு சிறு குடிசையில் வாழத் துவங்கினார். ஆனால் துறவிகளோ இவரை, 984ல், புனித டன்ஸ்டன் அவர்கள் துவக்கிய பாத் துறவு இல்லத்தின் அதிபராக நியமித்தனர். சில ஆண்டுகளில் Winchester மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட புனித Alphege அவர்கள், அங்கு 20 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். எளிய வாழ்வும், ஏழைகள் மீது கொண்டிருந்த அன்பும் இவரை மிகவும் பிரபலமாக்கியது. 1005ம் ஆண்டில் Canterbury பேராயராக நியமிக்கப்பட்ட இவர், உரோம் நகர் வந்து திருத்தந்தை 18ம் ஜானிடமிருந்து பாலியத்தைப் பெற்றார். இவர் இங்கிலாந்திற்குத் திரும்பிவந்தபின், சிறிதுகாலத்தில் இவரது பேராயர் இல்லம் சூறையாடப்பட்டதுடன், இவரும் பிணையக்கைதியாக எடுத்துச் செல்லப்பட்டார். மூவாயிரம் பவுண்டுகளை இவர் விடுதலைக்கென எதிரிகள் கேட்க, இவரோ, திருஅவைப் பணத்தைக் கொடுத்து என் உயிரைக் காப்பாற்றத் தேவையில்லை என மறுத்தார். ஆகவே, 1012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி, இவர் அடித்தேக் கொல்லப்பட்டார். 1023ம் ஆண்டு இவர் உடல் தோண்டப்பட்டபோது அழிவுறாமல் இருந்தது. 1078ம் ஆண்டு, திருத்தந்தை 7ம் கிறகரி அவர்களால் இவர் புனிதர் என அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.