2014-11-26 16:08:16

திருப்பீடத்தின் தூதரக உறவுகளின் அடித்தளம், ஆன்மீகம் - வத்திக்கான் உயர் அதிகாரி


நவ.26,2014. வர்த்தகம், இராணுவம், அரசியல் என்ற அடிப்படையில் நாடுகள் மேற்கொள்ளும் தூதரக உறவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, வத்திக்கான் தன் தூதரகப் பணிகளை மேற்கொள்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆஸ்திரேலிய நாடு, வத்திக்கானுடன் தூதரகத் தொடர்புகளை ஏற்படுத்திய முதல் நூற்றாண்டைச் சிறப்பிக்க, சிட்னி மாநகரில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், திருப்பீட வெளிநாட்டுத் துறையின் தலைவர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
திருப்பீடம், ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளைக் குறித்து விளக்கிப் பேசிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், திருப்பீடத்தின் தூதரக உறவுகளின் அடித்தளம் ஆன்மீகம் என்று சுட்டிக்காட்டினார்.
அண்மைய மாதங்களில் மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்த திருத்தந்தையும், திருப்பீடமும் மேற்கொண்டுவரும் முயற்சிகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், இந்த முயற்சிகள் அனைத்தும், செபத்தையும், பிறரன்பு பணிகளையும் மையப்படுத்தியவை என்பதை வலியுறுத்தினார்.
மனித மாண்பு என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்த, திருப்பீடம் மேற்கொண்டு வரும் தூதரக செயல்பாடுகளையும் பேராயர் மம்பெர்த்தி அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.