2014-11-26 16:11:57

கோவாவில், இந்தியக் கிறிஸ்தவ கலையம்சங்களுடன் தீட்டப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சி


நவ.26,2014. கிறிஸ்தவ ஓவியர்களான Angelo da Fonseca, Angela Trindade, அருள் சகோதரிகள் Genevieve, Claire ஆகியோர், கீழை நாடுகளின், குறிப்பாக, இந்திய நாட்டின் மதங்களையும், கிறிஸ்தவ மதத்தையும் இணைக்கும் பாலங்களாக அமைந்தனர் என்று கோவா பேராயர் Filipe Neri Ferrao அவர்கள் கூறினார்.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கோவாவில், இச்சிறப்பு நிகழ்வையொட்டி, இந்திய கிறிஸ்தவ கலையம்சங்களுடன் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியைத் திறந்துவைத்த பேராயர் Ferrao அவர்கள் இவ்வாறு கூறினார்.
இந்தியக் கிறிஸ்தவ கலைஞர்கள் கழகம் உருவாக்கியுள்ள ஓவியங்கள் அடங்கிய இந்தக் கண்காட்சி, கோவாவின் பேராலயத் திடலில் உள்ள கார்மேல் அன்னை சிற்றாலயத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் இறுதி நாளான சனவரி 4ம் தேதி முடிய, இந்தக் கண்காட்சியும் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : TOI/UCAN








All the contents on this site are copyrighted ©.