2014-11-26 16:09:25

அமைதி ஆர்வலர்கள் : 1963ல் நொபெல் அமைதி விருது (ICRC and IFRC)


நவ.26,2014. அன்பு நேயர்களே, ICRC என்ற அனைத்துலக செஞ்சிலுவைக் கழகம், இரண்டு உலகப் போர்களின்போது ஆற்றிய மகத்தான மனிதாபிமானப் பணிகளுக்காக, 1917ம் ஆண்டிலும், 1944ம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. இதே அனைத்துலக செஞ்சிலுவைக் கழகமும், IFRC என்ற அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து 1963ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்துகொண்டன. IFRC கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவையொட்டி அமைதிக்கான நொபெல் விருது வழங்கப்பட்டது. IFRC கூட்டமைப்பு, கிறிஸ்தவத்தின் அடையாளமான சிலுவையையும், இஸ்லாத்தின் அடையாளமான பிறையையும் சிவப்பு நிறத்தில் சின்னங்களாகக் கொண்டுள்ளது. உலகின் மிகப் பெரிய மனிதாபிமான வலையமைப்பான இக்கூட்டமைப்பு, 188 தேசியக் கழகங்கள் மூலம் ஒரு கோடியே எழுபது இலட்சத்துக்கு மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்களின் உதவியுடன் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 16 கோடி மக்களுக்கு நற்பணியாற்றி வருகின்றது. இயற்கைப் பேரிடர்களின்போதும், அவற்றுக்குப் பிறகும், நலவாழ்வின் அவசரகால நெருக்கடிகளிலும் நாடு, இனம், மொழி, மதம், அரசியல் கருத்து என்ற வேறுபாடின்றி, பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவர்கள் வாழ்வை முன்னேற்றுவதற்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. மேலும், மனித வாழ்வைப் பாதுகாத்து மனிதத் துன்பங்களை அகற்றுவதற்கும், உலகில் அமைதிக் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தி அதனை ஊக்குவித்தும் வருகிறது IFRC கூட்டமைப்பு.
IFRC கூட்டமைப்பிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சட்ட அமைப்பில் தனித்து இயங்குகிறது. ஆனால் அடிப்படைக் கொள்கைகள், அடையாளங்கள், நிர்வாக அமைப்புகள் போன்றவை வழியாக ஒன்றிணைந்துள்ளன. ‘வேகமாக மாறிவரும் இவ்வுலகில் மனித வாழ்வைப் பாதுகாத்தல், மனங்களை மாற்றுதல்’ என்ற விருதுவாக்குடன், பல எதிர்கால மனிதாபிமான மற்றும் வளர்ச்சித்திட்ட யுக்திகளிலும் இது இறங்கியுள்ளது. ICRC என்ற அனைத்துலக செஞ்சிலுவைக் கழகம், 1863ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், ஹென்றி டியூனான்ட்(Henry Dunant), குஸ்தாவ் மாய்னியர்(Gustave Moynier) ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் 25 பேர் கொண்ட குழு, பன்னாட்டு அளவிலும், உள்நாட்டளவிலும் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய சண்டைகளில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் மாண்பையும் அனைத்துலகச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பதற்குத் தனிப்பட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. 1919ம் ஆண்டில் நிறுவப்பட்ட IFRC கூட்டமைப்பு 1963ம் ஆண்டில் அமைதிக்கான நொபெல் விருதைப் பகிர்ந்துகொண்ட போது செஞ்சிலுவைக் கழகங்களின் கூட்டுறவு என்ற பெயரிலே இயங்கி வந்தது. பின்னர், 1991ம் ஆண்டில் இது, "அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கங்களின் கூட்டமைப்பு" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் செயலகம் ஜெனீவாவில் உள்ளது. அக்கூட்டமைப்பின் தேசியக் கழகங்கள் ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் உள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளின் தேசியச் செஞ்சிலுவைக் கழகங்களின் பிரதிநிதிகள் 1919ம் ஆண்டில் பாரிசில் கூடி செஞ்சிலுவைக் கழகங்களின் கூட்டுறவை உருவாக்கினர். அப்போது அமெரிக்க செஞ்சிலுவைக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய ஹென்ரி டேவிட்சன் அவர்களின் கருத்துருவாக்கத்தில் இது உருவானது. இதன்மூலம், ICRC செஞ்சிலுவைக் கழகத்தின் வரையறைக்கு உட்பட்ட பன்னாட்டுப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டு, போர்கள் தவிர பிற அவசரகாலங்களிலும் உதவிகள் செய்வதற்கு வழி அமைக்கப்பட்டது. மனிதரால் அல்லது இயற்கையால் ஏற்படும் பேரிடர் சமயங்களில் மனிதாபிமானப் பணிகள் ஆற்றுவதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, இக்கூட்டுறவில் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி, இரஷ்யா ஆகிய நாடுகளின் தேசியச் செஞ்சிலுவைக் கழகங்களுக்குச் சலுகையுடன்கூடிய தகுதிநிலை வழங்கப்பட்டது. இந்த விதிமுறைகள், ICRC கழகத்தின் சமத்துவ மற்றும் உலகளாவியத் தன்மைக்கு முரணானதாக இருந்தது. இது ICRC கழகத்துக்குக் கவலையையும் ஏற்படுத்தியது.
எனினும், 1997ம் ஆண்டில் ICRC கழகமும், IFRC கூட்டமைப்பும் Sevilleல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில், இவ்வியக்கத்துக்குள்ளே இவ்விரு அமைப்புகளின் பொறுப்புகள் விளக்கப்பட்டன. 2004ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட சுனாமிப் பேரிடருக்குப் பின்னர் IFRC கூட்டமைப்பு தனது மிகப் பெரியப் பணியைத் தொடங்கியது. நாற்பதுக்கும் மேற்பட்ட தேசியக் கழகங்கள், 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்களைக் கொண்டு நிவாரணப் பணிகளைச் செய்தது. இக்கூட்டமைப்பு தொடங்கியவுடன், போலந்தில் நச்சுக்காய்ச்சல் தொற்றுநோயாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் நிவாரணப் பணிகளைச் செய்தது. 2012ம் ஆண்டில் மட்டும் 7 கோடியே 70 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்குப் பேரிடர் இடர் துடைப்புப் பணிகளையும், 7 கோடியே 72 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு நீண்டகால வளர்ச்சித் திட்டப் பணிகளையும் IFRC கூட்டமைப்பு செய்தது. கடந்த அக்டோபரில் ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டில் இருபதுக்கும் அதிகமான பகுதிகளில் காலராத் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது. இப்படி பல மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றது அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கங்களின் கூட்டமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.