2014-11-25 15:28:13

திருத்தந்தை பிரான்சிஸ், ஐரோப்பிய ஒன்றிய அவையினருக்கு வழங்கிய உரையின் சுருக்கம்


நவ.25,2014. ஏறத்தாழ, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் அரங்கத்தில் கூடியுள்ளீர்கள். ஐரோப்பிய ஒன்றிய அவை தன் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிவருகிறது. இவ்வேளையில், இந்த அவையை உருவாக்கியவர்கள் கொண்டிருந்த குறிக்கோளை எண்ணிப் பார்க்க விழைகிறேன்.
எந்த ஒரு நாடும், எந்த ஓர் இயக்கமும் தனது கருத்தியலை மற்றவர் மீது திணிக்காமல், அனைவரும் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்பதே, ஐரோப்பிய ஒன்றிய அவையை உருவாக்கியவர்களின் குறிக்கோளாக இருந்தது.
இக்குறிக்கோள், ஓர் ஒப்பந்தமாக, இலண்டனில் கையெழுத்திடப்படுவதற்கு (1949) பத்தாண்டுகளுக்கு முன், ஐரோப்பா, மிகப்பெரிய அழிவை உருவாக்கிய போரில் ஈடுபட்டது. ஐரோப்பாவை மீண்டும் கட்டியெழுப்ப, அமைதி, சுதந்திரம், மனித மாண்பு ஆகிய மூன்று மூலைக்கற்கள் தேவை.
அமைதி வழியில் செல்வதற்கு, அடுத்தவரை, நம் எதிரியாக அல்ல; உடன்பிறப்பாகக் காணும் பக்குவம் பெறவேண்டும். இந்த அமைதி, ஒரு நாளில் உருவாகப் போவதில்லை. தொடர் முயற்சிகளால், நீண்டகாலம் உருவாகவேண்டிய அமைதி இது.
போர்களையும், மோதல்களையும் சட்டங்களால் நிறுத்துவது அமைதியைக் கொணராது. மனங்களில் ஒப்புரவை வளர்த்து, சுதந்திரமாக ஒருவரை ஒருவர் அன்பு கூர்வதால் இந்த அமைதி உருவாகும்.
உறுதியான அமைதியை வளர்க்க, அமைதி குறித்த கல்வி தேவை. கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் மனித வரலாற்றில் எழுவது, இயற்கையே. ஆனால், அந்நேரங்களில், வேறுபாடுகளை மட்டும் பெரிதுபடுத்துவதால், அமைதியும், முன்னேற்றமும் தொலைந்துபோகின்றன. ஐரோப்பாவில் உருவாகியுள்ள மோதல்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய அவை, அரசியல் தீர்வுகளைக் காணும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பது, போற்றுதற்குரியது!
அமைதி, இன்னும் பல்வேறு வழிகளில் சோதிக்கப்படுகிறது. மத அடிப்படைவாதம், பன்னாட்டுத் தீவிரவாதம் ஆகிய போக்குகள், மனித உயிரைத் துச்சமாக மதிக்கின்றன. அப்பாவி உயிர்கள், ஆயிரக்கணக்கில் பலியாகின்றன.
இந்த உயிர் கொலைகளை அதிகரிப்பதற்கு, மனசாட்சி ஏதுமற்ற, பன்னாட்டு ஆயுத விற்பனை துணை செல்கிறது. "ஆயுதக் குவிப்பு போட்டி, மனிதகுலம் சந்தித்துள்ள மிகப்பெரும் சாபம்" என்று கத்தோலிக்கத் திருஅவை கூறியுள்ளது.
அமைதியைக் குலைக்கும் மற்றொரு போக்கு, மனித வர்த்தகம். இன்றைய உலகில் நிலவும் மனித வர்த்தகம், பழங்கால அடிமைத் தனத்தின் மறுபிறப்பு. ஆயுத வர்த்தகமும், மனித வர்த்தகமும், உலகம் தேடும் அமைதியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது உண்மை.
போர்களும், மோதல்களும் அற்றநிலை மட்டும் அமைதியை உறுதி செய்யாது. அமைதி என்பது, இறைவன் வழங்கும் கோடை என்பது, கிறிஸ்தவக் கண்ணோட்டம்.
மனித உரிமைகளை நிலைநாட்டுவதன் வழியாகவும், குடியரசை உறுதி செய்வதன் வழியாகவும், அமைதியை நிலைநாட்ட, ஐரோப்பிய ஒன்றிய அவை முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.
மனித சமுதாயத்தின் வளர்ச்சியில், ஐரோப்பாவிற்கு உள்ள பொறுப்பை இன்று நான் வலியுறுத்த விழைகிறேன். இத்தாலியக் கவிஞர், Clemente Rebora என்பவர் பயன்படுத்தியுள்ள ஓர் உருவகத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன். ஒரு மரத்தின் மிக உயரத்திலுள்ள கிளைகள், காற்றில் பலமாக அசைக்கப்பட்டாலும், அதன் வேர்களும், அடிமரமும் மண்ணில் ஆழமாக வேரூன்றியிருபதால், மரம் உறுதியாக நிற்கும் என்று கவிஞர் Rebora கூறியுள்ளார்.
ஐரோப்பிய சமுதாயம் எப்போதும் உயர்வைத் தேடிச் சென்றுள்ளது. கலை, அறிவியல், தத்துவம் என்ற பலத் துறைகளில், அது பெரும் உயரங்களைத் தொட்டாலும், அதன் வேர்களும், அடிமரமும் மண்ணில் உறுதியாகப் புதைந்திருந்ததால், அந்த மரம் உறுதியாக நின்றது. அண்மையக் காலங்களில், அறிவியலை மட்டுமே பெருமளவு நம்பியிருக்கும் ஐரோப்பா, தன் ஆழ்ந்த வேர்களை, அறிவு செறிந்த தன் வரலாற்றை மறந்து வருகிறதோ என்ற கவலை எழுகிறது. ஐரோப்பியச் சமுதாயம் வளர, வரலாற்று நினைவு, துணிவு, மேன்மையான எதிர்கால நோக்கு அனைத்தும் தேவை.

ஐரோப்பாவே, உன் சக்தி எங்கே? உன் வரலாற்றை வடிவமைத்து, உன்னைத் தூண்டிவந்த கருத்தியல் எங்கே? உண்மையைக் கண்டுபிடிக்கும் உன் தாகம் எங்கே? என்ற கேள்விகளை, ஐரோப்பிய நாடுகளுக்கு எழுப்பவேண்டும்.
ஐரோப்பாவின் வேர்களைத் தேடிச் செல்லும்போது, இரு அம்சங்கள் புலப்படுகின்றன. பன்முகம் கொண்ட தன்மை, மற்றும் தலைமுறைகளைப் பிணைக்கும் தன்மை.
நாட்டுக்கு நாடு வேறுபடும் கலாச்சாரம் மட்டுமல்லாமல், நாட்டுக்குள்ளும் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களின் ஒட்டுமொத்த உருவமே, பன்முகம் கொண்ட ஐரோப்பா. அதேபோல், பல தலைமுறைகளின் கருத்தியல்களைக் கொண்டிருப்பதால், தலைமுறைகளைப் பிணைக்கும் தன்மை கொண்டது, ஐரோப்பா.
இவ்விரு தன்மைகளையும் வளர்க்க, கலாச்சாரங்களிடையே உரையாடலை வளர்ப்பது அவசியம். கலாச்சார உரையாடலின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது, மத உரையாடல். இவ்வுரையாடலைப் பெருமளவில் வளர்ப்பது, ஐரோப்பிய ஒன்றிய அவையின் கடமை.
புலம் பெயர்ந்த மக்கள், தொழில் உலகின் பிரச்சனைகள் ஆகியவை, இன்றைய ஐரோப்பா சந்திக்கும் ஏனையச் சவால்கள். இறுதியாக, இவ்வுலகின் மீது, இயற்கையின் மீது நாம் காட்டும் அக்கறை. மதிப்பு ஆகியவை, நம்முன் உள்ள பெரும் சவால்கள்.
உரையாடல் என்ற உயர்ந்த வழியில், மனிதர்களை மதிக்கும் மனநிலையில், ஐரோப்பா, தன் வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.