2014-11-25 16:29:23

ஐரோப்பிய ஒன்றிய அவையில் திருத்தந்தை


நவ. 25, 2014. பிரான்சின் Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய அவையை சந்திப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாவது நிகழ்ச்சியாகும். இந்த அவை ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவிலுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளை மேற்பார்வையிட்டுவரும் இந்த ஐரோப்பிய அவை, 47 ஐரோப்பிய நாடுகளை தன் அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளது. இதன் பொதுச்செயலராக Thorbjorn Jagland செயல்படுகிறார். இவர் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமராவார்.
உள்ளூர் நேரம் செவ்வாய் பிற்பகல் 12 மணி 30 நிமிடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய அவையை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் பொதுச்செயலர் Thorbjorn Jagland அவர்களுடன் சிறிதுநேரம் தனியாக உரையாடியபின், நினைவுப் பரிசுகளைப் பரிமாறி, தங்கப்புத்தகத்தில் கையெழுத்திடவும் செய்தார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய அவையில் கூடியிருந்த அங்கத்தினர்களுக்கு உரையும் நிகழ்த்தினார்.
இந்த உரைக்குப்பின் 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள விமான நிலையத்தை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிக்கு வெளியே தன் 5வது திருப்பயணத்தை நிறைவுசெய்து ஆலித்தாலியா விமானத்தில் உரோம் நோக்கி பயணம் மேற்கொண்டபோது உள்ளூர் நேரம் ஏறத்தாழ பகல் 2 மணி, இந்திய நேரம் மாலை 6 மணி 30 நிமிடங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.