2014-11-22 16:20:42

நவம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், சனவரி, 4ம் தேதி வரை புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுகிறது


நவ.22,2014. இந்தியாவின் கோவா நகரில், மக்கள் பார்வைக்கு, இச்சனிக்கிழமை முதல் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் திறந்து வைக்கப்படுவது, கிறிஸ்தவ விசுவாசத்தை அறிக்கையிடுவதற்காக நமக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த வாய்ப்பு என்று, கோவா பேராயர், Filipe Neri Ferrão அவர்கள் கூறினார்.
மறைபோதகப் பணியின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடலை வணங்கி, அதன் முன் செபிக்கும் வாய்ப்பை விசுவாசிகள் பெறும்போது, அவர்களின் விசுவாசம் தூண்டப்பட்டு, ஆழப்படுத்தப்படும் என்று கூறினார், பேராயர் Ferrão.
1552ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3ம் தேதி, சீனாவின் Sancian தீவில் இறைவனடி சேர்ந்த புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல், 1554ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கோவாவில் உள்ள Bom Jesus பசிலிக்காவில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.
இப்புனிதரின் உடல், 1782ம் ஆண்டு, முதல் முதலாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டதிலிருந்து, தற்போது, 17வது முறையாக இடம்பெறும் இந்நிகழ்வு, நவம்பர் 22, இச்சனிக்கிழமை முதல், சனவரி, 4ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.