2014-11-22 16:20:34

திருத்தந்தை : வரலாற்றை மாற்றியமக்கவல்லது கருணை


நவ.22,2014. இரக்கமே தீர்ப்பை வெல்லும் என புனித யாகப்பர் தன் திருமுகத்தில் உரைப்பதுபோல் தனிமனிதர்களின் வரலாற்றையும் மக்கள் சமூகங்களின் வரலாற்றையும் மாற்றவல்லது இரக்கம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவ சபைகளிடையேயான மறைபோதக ஒத்துழைப்பு குறித்து இத்தாலிய ஆயர் பேரவையின் தேசிய அலுவலகம் ஏற்பாடுச் செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைப்பணியாளர்களாக பணிபுரிய ஒவ்வொரு தலைமுறையும் அழைப்புப் பெற்றுள்ளது என்றார்.
பலகாலமாக மறைப்பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி சிறப்புப் பணியாற்றியுள்ள இத்தாலியத் திருஅவையை வெகுவாகப் பராட்டுவதாக உரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பாக, தென் அமெரிக்காவின் அமேசான் பகுதிகளில் இத்தாலிய மறைபோதகர்களின் கல்லறைகள் உள்ளன என்றார்.
ஏழை எளிய மக்களிடையே பணிபுரிய குருக்களை அனுப்பி, இத்தாலிய திருஅவை உதவி வருவது, அனைத்துலக திருஅவைக்கான ஒரு கொடை எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், “உண்மையிலேயே தேவையிலிருக்கும் ஒரு மனிதரை நாம் சந்திக்கும்போது, அவரில் இறைவனின் முகத்தை நாம் காண்கிறோமா?” என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று கேள்வியெழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.