2014-11-21 16:08:58

புதிய வழிபாட்டு ஆண்டை, "வறியோரின் ஆண்டு" என சிறப்பிக்க, மணிலா உயர் மறைமாவட்டம் முடிவு


நவ.21,2014. நவம்பர் 30, வருகிற ஞாயிறன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுடன் துவங்கும் புதிய வழிபாட்டு ஆண்டை, "வறியோரின் ஆண்டு" என சிறப்பிக்க பிலிப்பின்ஸ் நாட்டு, மணிலா உயர் மறைமாவட்டம் முடிவெடுத்துள்ளது.
2021ம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டின் தலத்திருஅவை தன் 500வது ஆண்டுவிழாவைச் சிறப்பிக்கவிருப்பதால், அதற்கு ஓர் முன்னேற்பாடாக, "வறியோரின் ஆண்டு" சிறப்பிக்கப்படும் என்று, இவ்வாண்டின் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் Luke Moortgat அவர்கள் தெரிவித்தார்.
தலைசாய்க்க ஓரிடமின்றி, இறைமகன் இயேசு வறுமையில் வாழ்ந்தாலும், தன் பணியை அயராமல் செய்ததை ஒரு முன்னோடியாகக் கொண்டு, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரை மையப்படுத்தி, வரும் வழிபாட்டு ஆண்டைச் சிறப்பிக்க மணிலா உயர் மறைமாவட்டம் முடிவெடுத்துள்ளது என்று அருள் பணியாளர் Moortgat அவர்கள் கூறினார்.
"வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை: என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" (திருத்தூதர் பணிகள் 3: 6) என்று திருத்தூதர் பேதுரு, ஊனமுற்ற ஒருவருக்குச் சொன்ன வார்த்தைகள் "வறியோரின் ஆண்டி"ன் மையக்கருத்தாக அமையும் என்று அருள் பணியாளர் Moortgat அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.