2014-11-21 16:04:10

உரோம் நகரில், திருஅவை இயக்கங்களும், புதியக் குழுமங்களும் இணைந்து நடத்தும் உலக மாநாடு


நவ.21,2014. திருஅவையில் உருவாகும் மறுமலர்ச்சி, எண்ணற்ற விசுவாசிகளின் நம்பிக்கையைப் புதுப்பிக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 20, இவ்வியாழன் முதல், 22, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில், திருஅவை இயக்கங்களும், புதியக் குழுமங்களும் இணைந்து நடத்தும் உலக மாநாட்டில், ஆயர்கள் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டிருந்த 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற அறிவுரை மடல் திருஅவையில், குறிப்பாக, இயக்கங்கள், குழுமங்கள் மத்தியில் உருவாக்கிவரும் நலமானத் தாக்கங்கள் குறித்து, கர்தினால் Ouellet அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
'நற்செய்தியின் மகிழ்வு' என்ற அறிவுரை மடலில் காணப்படும் "நற்செய்தியின் மகிழ்வு, மறைபரப்புப் பணியின் மகிழ்வு" என்ற வார்த்தைகள் இந்த உலக மாநாட்டின் மையக் கருத்தாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து, பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko அவர்கள் தன் மகிழ்வைத் தெரிவித்தார்.
திருஅவையில் உருவாகும் இயக்கங்களும், குழுமங்களும் திருஅவையின் ஓர் அடிப்படை பண்பை இவ்வுலகிற்குப் பறைசாற்றுகின்றன என்று திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதையும், இயக்கங்கள், மற்றும் குழுமங்களின் வளர்ச்சி திருஅவையின் வளர்ச்சி என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியதையும், கர்தினால் Rylko அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உலகின் 40 நாடுகளிலிருந்து வந்திருக்கும் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, இச்சனிக்கிழமையன்று நிறைவுபெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.