2014-11-20 16:21:43

நவம்பர் 20 - குழந்தைகள் உரிமை அகில உலக நாளின் வெள்ளி விழா


நவ.20,2014. குழந்தைகளின் உரிமைகள் பற்றி பேசும்போது, குழந்தைகளின் கருத்துக்களுக்கும் செவிமடுக்கும் அவசியம் உள்ளது என்று ஐ.நா. அவை கூறியுள்ளது.
நவம்பர் 20, இவ்வியாழன்று, குழந்தைகள் உரிமை அகில உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உலக நாள், இவ்வாண்டு தன் 25வது ஆண்டைச் சிறப்பிக்கிறது.
இவ்வெள்ளி விழாவையொட்டி, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், குழந்தைகளின் பிரச்சனைகளைப் பேசுவதற்கு, குழந்தைகளே தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
1989ம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி நிறைவேற்றப்பட்ட குழந்தைகள் உரிமை அகில உலக அறிக்கையின் அம்சங்கள், 194 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன என்றும், ஐ.நா. அவை இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து அறிக்கைகளிலும், இவ்வறிக்கையே உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும், ஐ.நா. செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
குழந்தைகள் உரிமை அகில உலக நாளின் வெள்ளி விழாவையொட்டி, கருத்தரங்குகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை, உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.