2014-11-20 13:04:10

நவ.21,2014 புனிதரும் மனிதரே : தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் (The Presentation of Our Lady)


தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா, கிழக்குலகில் மிகவும் தூய இறையன்னை ஆலயத்துக்குள் நுழைந்தது எனக் கொண்டாடப்படுகிறது. அன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன. குழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James), இவ்வாறு வாசிக்கிறோம். மரியாவின் பெற்றோராகிய சுவக்கீன், அன்னா ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாவும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு மரியா தனது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார் என்று யாக்கோபு எழுதியுள்ளார். மரியாவின் பிறப்பு நற்செய்தி (Gospel of the Nativity of Mary) யில், மரியாவின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியா ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவனின் அன்னையாகும் நிலைக்கு தன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. பைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன் சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி.பி.543ம் ஆண்டில் தூய கன்னிமரியாவுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 614ம் ஆண்டில் 2ம் Khosrau, எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாக்க் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் நீக்கினாலும், 1585ம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இதனை மீண்டும் உரோமைத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார். தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.