2014-11-20 16:01:53

திருத்தந்தை பிரான்சிஸ் : உரிமைகளைக் குறித்து அதிகமாகப் பேசும் நாம் கடமைகளை மறந்து வருகிறோம்


நவ.20,2014. உரிமைகளைப் பற்றி நாம் அனைவரும் பேசும் வேளையில், தெருவோரம் கையேந்தி நிற்கும் மனிதர்கள், தங்களுக்கு உரிய மாண்பை ஒரு தர்மமாக அல்ல, மாறாக, தங்கள் உரிமையாகக் கேட்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான, FAO, 'ஊட்டச்சத்து அளித்தல்' என்ற மையக் கருத்துடன், உரோம் நகரில் நடத்திய இரண்டாவது பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரிமைகளைக் குறித்து அதிகமாகப் பேசும் நாம் கடமைகளை மறந்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
வர்த்தகச் சந்தைகளின் தேவைகள், இலாபம் ஈட்டுதல் ஆகியவை முதன்மை எண்ணங்களாக மாறிவரும் இன்றைய உலகில், மனிதர்களின் அடிப்படை தேவையான உணவை, ஒரு விற்பனைப் பொருளாக மட்டுமே பார்க்கக்கூடிய ஆபத்து பெருகிவருகிறது என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
மனித உரிமைகள், குறிப்பாக, மக்களின் உணவுத் தேவை என்ற உரிமை, வெறும் சட்டங்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் மட்டும் கருதப்படாமல், பகிர்ந்தளிக்கும் செயல்களாக மக்களை சென்று அடையவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
1992ம் ஆண்டு, ஊட்டச்சத்து குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், உலகம் பெற்றிருக்கும் அளவுகடந்த செல்வங்களும், நாம் வீணாக்கும் பொருள்களும் ஒருசேர காட்டும் முரண்பாட்டை விளக்கினார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முரண்பாடு இன்னும் நம்மிடையே உள்ளது என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.
நம்மிடையே நிலவும் ஊழலை மறைக்கும் வகையில், உலகில் நிலவும் பசிக்கொடுமையின் கோரத்தை முற்றிலும் வெளிப்படுத்தாதவண்ணம் புள்ளிவிவரங்களை மாற்றி, திரித்துக் காட்டுவது உலக அரசுகளின் போக்காக உள்ளது என்பதையும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.
உலக அரசுகள் எழுதும் சட்டங்கள் அனைத்தையும் தாண்டி, அன்பு, நீதி, அமைதி என்ற அடிப்படை மனித பண்புகள், எழுதப்பாடாத சட்டங்களாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதியும்போது, மனித குடும்பத்திற்கு உணவளிப்பது இன்னும் எளிதாக மாறும்.
மனித குடும்பம் அனைத்தும் ஒரே இறைவனிடமிருந்து உருவானது என்பதை நாம் நம்பினால், மக்கள் அனைவரும் மாண்புடன் தங்கள் உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்குத் தடையாக எந்த ஒரு சட்டமும், தடையும் எழாது என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.