2014-11-20 16:16:30

எருசலேமில், தாக்கப்பட்ட தொழுகைக் கூடத்தில், அனைத்து மதத் தலைவர்களும் சந்திப்பு


நவ.20,2014. மக்கள் வழிபாடு மேற்கொள்ளும் இடங்களில் வன்முறைகளை மேற்கொள்வது மனித கலாச்சாரத்திற்கு இழைக்கும் பெரும் கொடுமை என்று எருசலேம் நகர் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
நவம்பர் 18, இச்செவ்வாயன்று, எருசலேமில் அமைந்திருந்த Kehilat Bnai Torah என்ற யூதத் தொழுகைக் கூடத்தில் இரு பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு யூத மதக் குருக்களும், ஒரு காவல் துறையினரும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, எருசலேமில் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து, தாக்கப்பட்ட தொழுகைக் கூடத்தையும், யூத மதத் தலைவர்களையும் சந்தித்தபோது, வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
பல்வேறு மதத் தலைவர்களும் இந்த யூதத் தொழுகைக் கூடத்தில் கூடிவந்திருப்பது நம்பிக்கையின் ஓர் அடையாளம் என்று கூறிய முதுபெரும் தந்தை Twal அவர்கள், கிறிஸ்தவர்கள் கொண்டாடவிருக்கும் திருவருகைக் காலம், வன்முறையில் மூழ்கியுள்ள இவ்வுலகிற்கு அமைதியின் இளவரசரைக் கொணரும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.