2014-11-19 16:33:34

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, வட இலங்கைப் பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தை - மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்


நவ.19,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே வட இலங்கைப் பகுதிக்கு வருகை தரும் முதல் திருத்தந்தையாக இருப்பார் என்றும், அவரது வருகை இலங்கையில் நிலவும் துயரம் நிறைந்த பிளவுகளை குணமாக்கும் என்று தான் நம்புவதாகவும் இலங்கை ஆயர் ஒருவர் கூறினார்.
“ஆசியாவில் மறைபரப்புப்பணி: திருத்தந்தை 2ம் ஜான்பால் முதல், திருத்தந்தை பிரான்சிஸ் வரை” என்ற தலைப்புடன், உரோம் நகரில் இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், அருள் பணியாளர் ஜோசப் வாஸ் அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளார் என்று கூறினார்.
இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களில் 32 விழுக்காட்டினர் மன்னார் மறைமாவட்டத்தில் வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், 30 ஆண்டுகளாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரிலும், அதைத் தொடர்ந்த கடந்த 5 ஆண்டுகளும் பெருமளவு துன்பங்களைத் தாங்கி வருபவர்கள் தமிழர்களே என்று கூறினார்.
இத்தகையச் சூழலில் வட இலங்கைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தருவது, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கும் என்று ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.