2014-11-19 16:36:55

அனைத்துப் போர்களிலும் பலியாவது அப்பாவி மக்களே - பேராயர் சில்வானோ தொமாசி


நவ.19,2014. நகரங்களில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் கூடிவரும் நிலையில், நகர்ப்புறங்கள் போர்களின் இலக்காக மாறிவருவது, உயிர்ப்பலிகளைப் பெருகச் செய்துள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டார்.
ஜெனீவாவில் செயலாற்றும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், ஆயுதங்கள் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
நாடுகளிடையிலும், உள்நாட்டிலும் உருவாகும் அரசியல் மோதல்கள் போர்களாக மாறும் வேளையில், அனைத்துத் தாக்குதல்களிலும் பலியாவது அப்பாவி மக்களே என்று, பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் கவலையை வெளியிட்டார்.
மனிதர்களால் நேரடியாக இயக்கப்படாமல், கணணிகளின் துணையோடு, வெகு தூரத்திலிருந்து இயக்கப்படும் போர்க் கருவிகள் பெருகி வருவதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி அவர்கள், தொழில்நுட்பத்தை அளவுக்கதிகமாக நம்பி மேற்கொள்ளப்படும் போர்களில், மனித உயிர்கள் பலியாவதும் பெருகிவருகிறது என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / VIS








All the contents on this site are copyrighted ©.