2014-11-17 14:04:08

புனிதரும் மனிதரே : கடவுளணர்வில் படிப்பை மறந்தவர் (St. Gregory of Neocaesarea)


மூன்றாம் நூற்றாண்டில், சிறிய ஆசியாவின் போந்துஸ் பகுதியில் வாழ்ந்த கிரகரியும், அவரது சகோதரர் Athenodorusம் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். எனவே இவர்கள் இருவரும் பெய்ரூட் சென்று உரோமைச்சட்டத்தில் புலமை பெறுமாறு இவர்களின் ஆசிரியர் ஆலோசனை கூறினார். இவ்விரு இளையோரும் அவ்வாறு செல்வதற்குத் தீர்மானித்திருந்த நேரத்தில், இவர்களது சகோதரியின் கணவர், பாலஸ்தீனத்தில் இருந்த உரோமை ஆளுனரின் சட்ட ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார். இதனால் இச்சகோதரர்கள் தங்களின் சகோதரிக்குத் துணையாக பாலஸ்தீனாவின் செசாரியாவில் தங்கிவிட்டனர். அங்கு, அலெக்சாந்திரியா மறைக்கல்வி நிறுவனத்தின் நிபுணர் ஒரிஜன் இருப்பதாக அறியவந்தனர். இவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தால் இவ்விரு சகோதரர்களும் அவரோடு பேசிப் பழகத் தொடங்கினர். கிறிஸ்தவரான ஒரிஜன், தனது விவாதங்களில் கடைப்பிடித்த நேர்மையும் உறுதியான கொள்கைப்பிடிப்பும், மேலும் பல குணங்களும் இச்சகோதரர்களைக் கவர்ந்தன. இந்தத் தொடர்பில் இவர்கள் பெய்ரூட் செல்வதையும், உரோமைச்சட்டப் படிப்பையும் மறந்தனர். ஒரிஜன் அவர்களிடம் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கிரகரியும், Athenodorusம் கிறிஸ்தவம் பற்றி அறிந்து அம்மதத்தைத் தழுவினார்கள். கிரகரிக்கு 14 வயது நடந்தபோது தந்தையை இழந்தார். தியோடர் அதாவது கடவுளின் கொடை எனப் பொருள்படும் இயற்பெயரைக் கொண்டிருந்த கிரகரி, திருமுழுக்குப் பெற்ற பின்னர் மெய்யியலும், இறையியலும் கற்றதோடு, தனது ஆசிரியர் ஒரிஜன் அவர்களிடமிருந்து அறிவையும் ஒழுக்கத்தையும் கற்றார். தனது 40வது வயதில் செசாரியாவின் ஆயராக நிமிக்கப்பட்டார். நோயாளிகள் பலரைக் குணமாக்கினார். தீயஆவி பிடித்திருந்த பலருக்கு நலமளித்தார். ஆலயம் கட்டுவதற்குத் தடையாக, குறுக்கே நின்ற மலையை செபத்தால் நகர்த்தினார். எதிர்காலத்தில் நடக்கவிருப்பவைகளை இறைவாக்காகச் சொன்னார் இவர். இதனாலே ஆயர் கிரகரி அவர்கள், Thaumatourgos அதாவது அற்புதங்கள் நிகழ்த்துபவர் என்று அழைக்கப்பட்டார். நியோசெசாரியாவில் ஏறக்குறைய கி.பி.213ம் ஆண்டுவாக்கில் பிறந்த புனித ஆயர் கிரகரி அவர்கள், 270க்கும் 275க்கும் இடைப்பட்ட காலத்தில் இறந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவரின் விழா நவம்பர் 19.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.