2014-11-17 15:43:26

திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுளின் படைப்பில் தேவையற்றது என்று எதுவுமில்லை


நவ.17,2014. பயன்படுத்தப்பட்டு குப்பையென வீசியெறியப்படும் பொருள் மனிதர்கள் என்ற எண்ணத்திற்கு எதிராகப் போராடிவரும் மக்களுக்கு, தன் ஊக்கத்தை வழங்குவதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனிதர்கள் பொருள்களாக கடத்தப்பட்டு, விற்கப்படுவதை எதிர்த்துப் போராடும் குழுவொன்று ஏற்பாடு செய்துள்ள திருப்பீடக் கல்விக்கழகக் கருத்தரங்கில் பங்கு பெறுவோரை இஞ்ஞாயிறன்று சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் படைப்பில் தேவையற்றது என்று எதுவுமில்லை, அனைத்தும் அதற்குரிய மாண்பை உள்ளடக்கியது என்று கூறினார்.
ஒவ்வொருவரும் வாழ்வைப் பாதுகாக்க தங்களை இன்னும் கூடுதலாக அர்ப்பணிக்கவேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருத்தரங்கில் கலந்துகொள்வோரிடம் முன்வைத்தார்.
இதற்கிடையே, ஞாயிறு பிற்பகல் திருத்தந்தையர்களின் கோடைவிடுமுறை இல்லம் அமைந்துள்ள Castel Gandolfo சென்று, ஆர்ஜென்டீனா கலைஞர், Alejandro Marmo அவர்கள் உருவாக்கியுள்ள இரு சிலைகளை ஆசீர்வதித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரும்பி வரும் வழியில், உரோம் நகரில் அமைந்துள்ள 11ம் பயஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்தினால் Jorge Maria Mejia வையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.