2014-11-15 14:25:53

புனிதரும் மனிதரே எல் சால்வதோர் அடக்குமுறைக்கு எதிர் சாட்சிகள்


1989ம் ஆண்டு, நவம்பர் 16ம் தேதி விடியற்காலையில், எல் சால்வதோர் நாட்டுத் தலைநகர், சான் சால்வதோரில் இயேசு சபையினர் நடத்திவரும் 'மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்'தில் (UCA) Atlacatl Batallion என்ற அதிரடிப் படையினர் நுழைந்தனர். இயேசு சபை இல்லத்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு துறவிகளை வெளியே இழுத்துவந்து, அவர்களைக் குண்டுகளால் துளைத்துக் கொன்றனர். சேரியில் இருக்கும் தங்கள் இல்லத்தில் தங்கினால், இராணுவத்தினர் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்தினால், அன்றிரவு, இயேசு சபை இல்லத்தின் வரவேற்பறையில் தங்கியிருந்த இல்லப் பணியாளரான ஒரு பெண்ணையும், அவரது 16 வயது மகளையும் அதிரடிப் படையினர் கொன்றனர். இந்த எட்டு பேரின் படுகொலையை அறிந்த நாடு அதிர்ச்சி அடைந்தது.
எல் சால்வதோர் நாட்டில் இராணுவத்தின் துணையுடன் நடைபெற்றுவந்த சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடிய பலருள், இயேசு சபை அருள் பணியாளர் Rutilio Grande அவர்கள் 1977ம் ஆண்டு கொல்லப்பட்டார். அவரது நண்பரும், சான் சால்வதோர் பேராயருமான Oscar Romero அவர்கள், 1980ம் ஆண்டு திருப்பலி நிகழ்த்தியபோது பீடத்திலேயே கொல்லப்பட்டார். இக்கொலைகளைத் தொடர்ந்து, எல் சால்வதோர் நாட்டில், 1981ம் ஆண்டு உள்நாட்டுப் புரட்சி வெடித்தது. இந்தப் புரட்சியின்போது, மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தை நடத்திவந்த இயேசு சபையினர், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து குரல் எழுப்பியதோடு, நீதியை நிலைநாட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இயேசு சபையினரின் முயற்சிகளை முறியடிக்க, Atlacatl Batallion என்ற அதிரடிப் படையினர், ஆறு இயேசு சபையினரையும், இரு பெண்களையும் கொலை செய்தனர். இந்த அதிரடிப் படையினர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு இராணுவத்தால் பயிற்சி பெற்றவர்கள். இக்கொலைகளுக்கு ஆணைவிடுத்த இப்படையினரின் தலைவர், Jose Ricardo Espinosa, இயேசு சபையினர் நடத்திவந்த பள்ளியில் படித்தவர்.
இந்தப் படுகொலைகள் உலக மக்களின் மனசாட்சியை விழித்தெழச் செய்தது. கொலை செய்யப்பட்ட 8 பேரும் நீதியின் சாட்சிகள் என்று மக்களால் வணங்கப்படுகின்றனர். 1989ம் ஆண்டு நடைபெற்ற இக்கொலையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளால், 1992ம் ஆண்டு புரட்சி நீங்கி, நாட்டில் அமைதி நிலவியது.
கொல்லப்பட்ட ஆறு இயேசு சபையினரின் பெயர்கள்: Ignacio Ellacuría, Segundo Montes, Ignacio Martín Baró, Juan Ramón Moreno, Amando López, மற்றும் Joaquin López y López. கொல்லப்பட்ட இரு பெண்களின் பெயர்கள்: Julia Elba Ramos, Celina Ramos. இவர்கள் கொல்லப்பட்ட, நவம்பர் 16ம் தேதியின் (1989) 25ம் ஆண்டு நினைவு, இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.