2014-11-15 16:09:59

ஜி-20 நாடுகளின் மாநாடு, விரிவாக்கப்பட்ட அரசியல் மேடையாக இருக்கக் கூடாது, பிரிஸ்பேன் பேராயர்


நவ.15,2014. ஆஸ்திரேலியாவில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள ஜி-20 நாடுகளின் மாநாடு, விரிவாக்கப்பட்ட அரசியல் மேடையாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாறிவிடக்கூடும் என்ற அச்சம் பலரில் ஏற்பட்டுள்ளதென்று, ஆஸ்திரேலிய பேராயர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தொடங்கியுள்ள ஜி-20 நாடுகளின் மாநாடு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பிரிஸ்பேன் பேராயர் Mark Coleridge அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாநாட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று, இதில் எடுக்கப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மனித மற்றும் அறநெறிக் கூறுகளைக் கொண்டதாய் இருக்குமாறு பேராயர் Coleridge அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
புவியின் வெப்பநிலை மாற்றம், சிறுபான்மையினர் நடத்தப்படும் முறை, புகலிடம் தேடுவோர்மீது கொண்டுள்ள எண்ணங்கள், வறுமை, பாதுகாப்பின்மை, பயங்கரவாதம் போன்ற விவகாரங்கள் இம்மாநாட்டில் இடம்பெற வேண்டும் என்றும் பேராயர் Coleridge அவர்கள் கூறினார்.
இதற்கிடையே, உலகில் அதிகமான பொருளாதார வளமையைக் கொண்டிருக்கும் இருபது நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ள இம்மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.