2014-11-14 16:33:12

வீடற்றவர்களுக்கு முகாம்கள், அரசுகளிடம் விவரம் கேட்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்


நவ.14,2014. இந்தியாவில் வீடற்ற ஏழை எளிய மக்கள் வாழ்வதற்குத் தேவையான பாதுகாப்பான முகாம்களை ஏற்படுத்தி கொடுப்பதற்காக, இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, மூன்று வார காலத்திற்குள் மத்திய அரசு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணையில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய அரசு இன்னும் பத்து நாள்களுக்குள் இது தொடர்பான அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் கூட்டத்தை நடத்தவும் கூறியுள்ளது.
அந்தக் கூட்டத்திற்கு நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்துக்கு அழைப்பு விடுக்குமாறும், இது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தைப் பெறுமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில்கூட குறைகள் உள்ளதாக இது தொடர்பான வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டில்லியில் மட்டும் 39 ஆயிரம் பேர் வீடற்று வாழ்வதாகவும், ஆனால் அரசால் அங்கு 17 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் பாதுகாப்பு முகாம்களை ஏற்படுத்தி தர முடியும் என்று கூறப்பட்டதாகவும் இவ்வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.