2014-11-14 16:31:47

திருத்தந்தை பிரான்சிஸ்: சிறாருக்கு விசுவாச வாழ்வில் எடுத்துக்காட்டாய் இருங்கள்


நவ.14,2014. சொற்களைவிட செயல்கள் அதிகச் சப்தமாகப் பேசுகின்றன, குறிப்பாக, இக்காலத்திய டிஜிட்டல் உலகின் சிறாருக்கும் இளையோருக்கும் விசுவாசத்தை வழங்குவதில் வார்த்தைகளைவிட, எடுத்துக்காட்டான வாழ்வே மிகவும் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வயது வந்தோராகிய நாம், சிறாரும் இளையோரும் உண்மை மற்றும் அன்பை அனுபவிக்க அவர்களுக்கு உதவ வேண்டுமென்று விரும்பினால், நமது எடுத்துக்காட்டான வாழ்வுமூலம் அதைச் செய்ய வேண்டுமென்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், ஓர் உரோம் பங்குத்தளச் சிறாருக்கும் இளையோருக்குமென சிறப்பான திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தச் சிறாரைப் பார்க்கும்போது வரவிருக்கும் உலகை, ஒரு வாக்குறுதியை நோக்குவதாக உள்ளது என்று கூறினார்.
நாம் நமது எதிர்காலத்துக்கு எதை விட்டுவைக்கப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, இந்நாளைய முதல் வாசகத்தில் நாம் கேட்டதுபோன்று, சிறாரும் இளையோரும் அன்பிலும் உண்மையிலும் நடப்பதற்கு அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்கிறோமா, அல்லது வெறும் வார்த்தையால் மட்டும் போதித்துவிட்டு, வேறொரு வழியில் செல்வதற்கு நம் வாழ்வை அனுமதிக்கின்றோமா என்ற கேள்வியையும் கேட்டார்.
சிறுசெடிகள் வளருவதை நாம் புறக்கணிக்க முடியாது என்றும், ஒரு கிறிஸ்தவர் சிறார் நலன்மீது அக்கறை காட்டி, தனது விசுவாசத்தையும், தான் வாழும் முறையையும், தனது இதயத்தில் உள்ளதையும் சிறாருக்கு வழங்க வேண்டுமென்றும் தனது மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நம்மிடமிருக்கின்ற மிகச் சிறந்ததாகிய விசுவாசத்தை இவர்களுக்கு வழங்க வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, சிறாரிடம், நீங்கள் ஏன் திருப்பலிக்கு வந்தீர்கள் என்றும் கேட்டார்.
உங்களைப் பார்க்க வந்தேன் என்று ஒரு சிறுவன் கூற, நானும் உங்கள் அனைவரையும் பார்க்க விரும்பினேன் என்று திருத்தந்தையும் பதில் கூறினார்.
உண்மையிலும், அன்பிலும் பயணம் செய்வதற்கு உதவிகேட்டு இயேசுவிடம் செபியுங்கள், அன்னைமரியிடம் செபியுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் சிறாரிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.