2014-11-13 16:13:52

மக்கள் நலனுக்கென திரட்டப்படும் நிதித் தொகை அரசியல் தலைவர்களின் வங்கிக் கணக்கில் - மலாவி நாட்டு ஆயர் பேரவையின் தலைவர்


நவ.13,2014. மருந்துகள் வழங்குதல், நலத்துறை பராமரிப்பு ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகளால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று ஆப்ரிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
மக்கள் நலனுக்கென பிற நாடுகளிலிருந்து திரட்டப்படும் நிதித் தொகையை அரசியல் தலைவர்களும், ஏனைய அதிகாரிகளும் தங்கள் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொள்வதால், மக்களுக்குச் சேரவேண்டிய நலத்துறை பயன்பாடுகள் தடைபட்டுள்ளன என்று, மலாவி நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், ஆயர் Joseph Mukasa Zuza அவர்கள் Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
பல நாடுகளின் பிறரன்பு அமைப்பினர், நல்ல எண்ணங்களுடன் நிதி உதவி செய்தாலும், அவற்றை அரசு அதிகாரிகள், தங்கள் சுயநலனுக்கென ஒதுக்கிக் கொள்வதால், பிறரன்பு அமைப்பினர் எதிர்பார்க்கும் விளைவுகள் கிடைக்காமல் போகிறது என்றும், இதனால், இவ்வமைப்பினரின் தொடர் உதவிகள் நாட்டை அடைவதில்லை என்றும் ஆயர் Zuza அவர்கள் கவலை வெளியிட்டார்.
பிற நாட்டு உதவிகள் தடைபடுவதால், மலாவி நாட்டில் 6,40,000 பேர் பட்டினியால் துன்புறும் நிலை உருவாகியுள்ளது என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் என்றும், ஆயர் Zuza அவர்கள் கூறினார்.
மலாவி நாட்டில் அரசியல் தலைவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ஒதுக்கிக்கொண்ட தொகை 30 மில்லியன் டாலர்கள், அதாவது, 185 கோடி ரூபாய்கள் என்ற அதிர்ச்சித் தகவல் அண்மையில் வெளியானது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.