2014-11-13 16:06:05

திருத்தந்தை பிரான்சிஸ் - இறையாட்சி என்பது, கண்ணைப் பறிக்கும் ஒரு காட்சியல்ல


நவ.13,2014. இறையாட்சி என்பது, கண்ணைப் பறிக்கும் ஒரு காட்சியல்ல; மாறாக, அது, மனநிறைவு தரும் ஒரு கொண்டாட்டம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இறையாட்சி குறித்து பரிசேயர் இயேசுவிடம் எழுப்பிய கேள்வியை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.
வறுமைப்பட்ட ஓர் எளியக் குடும்பத்தில், மாத இறுதியில் உள்ள சேமிப்புத் தொகை 50 காசுகளே என்றாலும், அக்குடும்பத்தில் காணப்படும் செபம், குழந்தைகள் மீது காட்டப்படும் அக்கறை ஆகிய செல்வங்களில் இறையாட்சி வெளிப்படுகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நாம் மேற்கொள்ளும் கொண்டாட்டங்கள், எடுத்துக்காட்டாக, நாம் ஈடுபடும் திருமணக் கொண்டாட்டத்தை ஓர் அருள் சாதனமாகக் காண்பதற்குப் பதில், வெளிப்புற ஆடம்பரங்கள் நிறைந்த ஒரு காட்சியாகக் காணும் போக்கு நம்மிடம் உள்ளது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
இத்தகையக் காட்சிகளில் இறையாட்சி வெளிப்படுவதில்லை; மாறாக, அமைதியான நம்பிக்கையில் வெளிப்படுகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மானிடமகன் துன்பங்கள் படவேண்டும் என்று கூறப்பட்டுள்ள நற்செய்தி வார்த்தைகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒவ்வொரு நாள் வாழ்விலும் நாம் சந்திக்கும், வேலை, குடும்பம் ஆகியச் சிலுவைகளைச் சுமப்பது, இறையாட்சியின் ஒரு முக்கிய அம்சம் என்று தன் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.