2014-11-12 15:39:58

பூமியிலிருந்து சுமார் 100 கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள வால் விண்மீனின் மீது இறங்கும் முயற்சி


நவ.12,2014. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அனுப்பிய ரொசெட்டா (Rosetta) விண்கலனிலிருந்து சிறு கலன் ஒன்று, பூமியிலிருந்து சுமார் 100 கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால், வால் விண்மீனின் மீது இறங்க, வெற்றிகரமாகப் பிரிந்திருக்கிறது.
இது போல, நகரும் ஒரு வால் விண்மீனின் மீது ஆய்வுக்கலன் ஒன்று இறங்குவது முன்பு எப்போதும் நடந்திராத ஒரு முயற்சியாக இருக்கும்.
‘பிலே’ என்ற இந்த ஆய்வுக்கலன் (Philae probe) அதன் தாய்க்கலனான ரொசெட்டா கலனிலிருந்து பிரிந்துவிட்ட நிலையில், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கத் தேவைப்படும் இறுதி சில கிலோமீட்டர்கள் தூரத்தைக் கடக்க ஏறத்தாழ ஏழு மணிநேரம் எடுத்துக்கொள்ளும்.
ஏறத்தாழ 400 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்ததென்று கருதப்படும் இந்த வால் விண்மீனில் உள்ள பனிக்கட்டி மற்றும் நுண்துகள்களை நேரடியாக இந்தக் கலன் ஆய்வு செய்வது, சூரியக் குடும்பம் மற்றும் இந்த அண்டம் உருவாகத் தேவைப்பட்ட அடிப்படை விடயங்களைப் பற்றிய புதிய பார்வைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1980களில் திட்டமிடப்பட்டு, பத்தாண்டுகளுக்கும் முன்னர் தொடங்கப்பட்ட இந்த விண்கலன் திட்டத்துக்கு நூறு கோடி டாலர்களுக்கும் மேல் செலவாகியிருக்கிறது.

ஆதாரம் : பிபிசி








All the contents on this site are copyrighted ©.