2014-11-12 16:09:48

நவ.13,2014. புனிதரும் மனிதரே : ஏழைகளுக்காக ஏழையாகி ஏழைகளுடனேயே வாழ்ந்தவர் (St. Andrew Hubert Fournet)


1752ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பிரான்சு நாட்டின் Poitiers எனுமிடத்திற்கு அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார் புனித ஆன்ட்ரு ஹூபெர்ட் ஃபோர்னே. படிப்பிலும் பக்தியிலும் ஆர்வமின்றி, விளையாட்டுத்தனமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அவர், ஒரு நல்ல குருவாக வேண்டுமென்று அவரின் தாய் விரும்பியதால், குருவாகப் பணியாற்றிக்கொண்டிருந்த தன் மாமாவிடம் அனுப்பப்பட்டார் ஆன்ட்ரு. தன் மாமாவின் பக்தியால் கவரப்பட்ட ஆன்ட்ருவும் குருத்துவக் கல்லூரியில் இணைந்து, குருவாகி, சிறப்புடன் பணியாற்றினார். ஒரு குருவாக, தான் போதிய உணவோடும் உடைகளோடும் சுகபோக வாழ்வை மேற்கொள்வதாக ஆன்ட்ரு உணர்ந்தபோது, அனைத்தையும் ஏழைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டு, ஒரு துறவிபோல் வாழத் துவங்கினார். ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்தபோது, அனைத்துக் குருக்களும் அரசுப்பணியாளர்களாகி, அரசு மதத்தில் இணையவேண்டும் என்ற கட்டளைக்கு அடிபணிய மறுத்து, மறைந்து வாழ்ந்து மறைப்பணியாற்றினார். 5 ஆண்டுகள் இஸ்பெயினிலும் இவர் வாழவேண்டியிருந்தது. பிரான்சுக்குத் திரும்பிவந்து புனித Elizabeth Bichier des Ages என்பவருடன் இணைந்து, திருச்சிலுவையின் புதல்வியர் என்ற துறவுசபையைத் துவக்கி ஏழைகளுக்கு சேவையாற்றினார். பல ஆண்டுகள் ஏழைகளுடனேயே வாழ்ந்த இவர், 1834ம் ஆண்டு மே 13ம் தேதி உயிரிழந்தார். 1933ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி திருத்தந்தை 11ம் பயஸால் புனிதராக அறிவிக்கப்பட்டார் ஆன்ட்ரு ஹூபெர்ட் ஃபோர்னே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.