2014-11-12 16:15:19

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை


நவ.12,2014. இத்தாலி முழுவதும், குறிப்பாக வடபகுதியில், கடந்த சில நாட்களாக பெருமழைப் பெய்து, பெருஞ்சேதங்களும் இடம்பெற்றுவரும் சூழலில், உரோம் நகரமும் அவ்வப்போது மழையால் நனைந்து கொண்டிருக்க, இப்புதன் திருத்தந்தையின் பொது மறையுரை, தூய பேதுரு வளாகத்தில் இடம் பெறுமா என்ற சந்தேகம் புதன் காலை வரை அனைவருக்கும் இருந்துகொண்டேயிருந்தது. ஏனெனில், புதன் அதிகாலையில் உரோம் நகரில் மழைக் கொட்டிக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். இதனால், நோயாளிக் குழந்தைகளையும், நோயுற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெரியவர்களையும் முத்திப்பேறுப்பெற்ற திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 'இன்று கால நிலை அவ்வளவு நன்றாக இல்லை. மழை பெய்யுமோ பெய்யாதோ என்ற சூழல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்கின்றேன். நீங்கள் இங்கேயே அமர்ந்து பெரியத் திரையில், பேதுரு வளாகத்தில் இடம்பெறும் பொதுமறையுரைக்குச் செவிமடுங்கள். உங்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துவதோடு, உங்களுக்கு என் ஆசீரையும் அளிக்கிறேன். அன்னை மரியை நோக்கி செபிப்போம்' என்று சிறு உரை ஒன்றை அவர்களுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களுக்கு ஆசீர் அளித்தபின், தூய பேதுரு வளாகம் நோக்கிச் சென்றார்.
அனைவருக்கும் வியப்பைத் தரும் வகையில் காலை 8.30 மணிக்கெல்லாம் மழை நின்றிருந்ததாலும், பொதுமறையுரை துவங்கவேண்டிய உள்ளூர் நேரம் 10.30 மணிவரை மழைத்தூறல் எதுவும் இல்லாததாலும், பேதுரு வளாகம் வழக்கம்போல் திருப்பயணிகளால் நிரம்பியே காணப்பட்டது. திருத்தந்தையும் தன் புதன் மறையுரையைத் துவக்கினார்.
அருள்பணியாளர்கள், தியாக்கோன்கள் ஆகியோரின் உதவியுடன் செயலாற்றும் ஆயர்களின் மேய்ப்புப்பணி வழியாக கிறிஸ்து எவ்வாறு தன் மந்தைக்கு ஆனமீக உணவூட்டுகிறார் என்பது குறித்து நம் கடந்தவார புதன் மறையுரையில் கண்டோம். இவர்களில் பிரசன்னமாயிருக்கும் இயேசு, திருஅவைக்கு தொடர்ந்து விசுவாசத்தையும், நம்பிக்கையையும், பிறரன்பு சான்றுகளையும் வழங்கிச் சேவையாற்றுகின்றார். ஆகவே, இந்த திருஅவைப் பணியாளர்கள், ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்திற்கும், திருஅவை முழுமைக்கும் இறைவனின் மிகப்பெரும் கொடையாகவும், கிறிஸ்துவின் பிரசன்னம் மற்றும் அன்பின் வாழும் அடையாளமாகவும் உள்ளனர்.
இந்த திருஅவைப் பணியாளர்கள், திருஅவைக்கும் கிறிஸ்துவுக்கும் நன்முறையில் பணியாற்றுவதற்குத் தேவைப்படும் சிறப்புப் பண்புகள் குறித்து இன்றையப் பொதுமறையுரையில் நாம் நோக்குவோம். உறுதியான விசுவாசம் மற்றும் புனிதத்துவம் எனும் அடிப்படைக் கொடைகள் தவிர, இரக்கம், கனிவு, பொறுமை, மற்றவர்கள் மீதான சிறப்பு அக்கறை ஆகிய மனிதப் பண்புகள் குறித்து புனித பவுல் குறிப்பிடுகின்றார். ஆன்மீக தலைமைத்துவப் பண்புக்கு இந்தக் கொடைகளும் தேவைப்படுகின்றன. திருஅவையில் திருநிலைப்படுத்தப்பட்ட தொண்டர்கள், தாங்கள் பெற்ற இறைக் கொடைகளை தொடர்ந்து தூண்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என புனித பவுல் தனிப்பட்ட விதத்தில் அழைப்பு விடுக்கிறார். தாங்கள் பெற்றிருக்கும் கொடைகள் இறை இரக்கத்தின்வழி தங்களுக்கு வழங்கப்பட்டவை என்பதை ஆயர்களும், அருள்பணியாளர்களும், தியாக்கோன்களும் ஏற்றுக்கொள்வதன் வழியாகவே, திருஅவையில் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு தாழ்ச்சியுடனும், தாராள மனதுடனும், ஞானம் மற்றும் கருணையுடனும் பணியாற்றி, அன்பு மற்றும் விசுவாசத்தில் திருஅவையின் ஒன்றிப்பை கட்டியெழுப்ப முடியும். ஆயர், அருள்பணியாளர், தியாக்கோன் என்ற இந்த திருஅவையின் மூன்று படிநிலை எனும் கொடைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவதோடு, தன் குழந்தைகளுக்கான இறைத்தந்தையின் அன்புநிறை அக்கறையின், வாழும் அடையாளங்களாக இருப்பதற்கான முயற்சிகளில் ஊக்கம் பெறுமாறும் இறைவனை நோக்கி மன்றாடுவோம்.
இவ்வாறு தன் புதன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.