2014-11-12 15:35:48

திருத்தந்தை இத்தாலிய ஆயர்களிடம் - இறைவனும், மனிதரும் சந்திக்கும் ஒரு பாலமாக அருள்பணியாளர்கள் வாழவேண்டும்


நவ.12,2014. தங்கள் பாவங்களுக்காக இறைவனின் மன்னிப்பைப் பெற்றவர்களாய், மற்றவர்களுக்கு மன்னிப்பைப் பெற்றுத்தரும் கருவிகளாய் வாழ்பவர்கள், அருள்பணியாளர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலிய ஆயர்களிடம் கூறினார்.
இத்தாலிய ஆயர் பேரவையின் 67வது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆயர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய இச்செய்தியை, ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Angelo Bagnasco அவர்கள் இச்செவ்வாய் மாலை, துவக்க அமர்வில் வாசித்தார்.
இத்தாலியின் அசிசி நகரில் துவங்கியுள்ள இந்த ஆண்டு கூட்டம், 'அருள் பணியாளர்களின் வாழ்வும் பயிற்சியும்' என்ற மையக் கருத்துடன் நடைபெற்றுவருகிறது.
அருள் பணியாளர் பயன்படுத்தும் மொழி, பொறுமையையும், தளரா உள்ளத்தையும் வெளிப்படுத்தவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, இறைவனும், மனிதரும் சந்திக்கும் ஒரு பாலமாக அருள் பணியாளர்கள் வாழவேண்டும் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அருள் பணியாளர்களின் பயிற்சி என்பது, ஒரு குறிப்பிட்ட காலத்துடன் முடிந்துபோவதல்ல என்றும், வாழ்நாளெல்லாம் இயேசுவின் சீடராக வாழ்வதற்கு அவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் வலியுறுத்தினார்.
அருள் பணியாளர்கள் தங்கள் பணியை ஓர் அழைப்பாகக் கொள்ளாமல், ஒரு தொழிலைப் போல நிறைவேற்றுவது தகுந்த வழி அல்ல என்பதையும் திருத்தந்தையில் தன் செய்தியில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.